இப்பிடியெல்லாம் சொல்லக் கூடாதோ? சாதி வெறி என்பது 'பெத்து வளத்து.. 'ன்னு பேசிட்டு கமுக்கமா நம்ம புள்ளய கூட்டிட்டு வந்துட்டு அந்த பயல முடிச்சி உடுறது மட்டுமல்ல.. அத நேரடியா செய்ய தேவை இல்லாம எல்லாமே நம்ம கூட்டமா இருந்துட்டா அவுனுகள உள்ளேயே உடாம வச்சிக்கலாம் இல்லே? அதும் பணம் பொழங்குற எடத்த உந்தீட்டு கமுக்கமா இருந்துட்டா நல்லவனாட்டவே இருந்துக்கலாம். இது வேற ரக சாதி வெறி. அதாவுது, உலக தமிழ் அமைப்பு (WTO) மாதிரி லெட்டர்பேடு ப்ராக்சியா இருந்தா சீண்ட தேவையில்லை. ஆனா பல ஊர்களை சேர்ந்த சங்கங்களின் கூட்டமைப்பா வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாதிரி பசையான இடமா இருந்தா நம்ம ஆளுக மட்டும் பதவிக்கு வர மாதிரி பாத்துக்கணும். அதுவும் சனநாயக ரீதியிலே வறமாதிரியே இருக்கணும். என்ன பண்ணாலும் ஒன்னு ரெண்டு கெரகம் பல்லுல சிக்குன சிக்கன் மாதிரி நொய்யி நொய்யின்னு கொடஞ்சிட்டே இருக்கும்.. அதுகளை என்ன பண்டுறது? அலுங்காம கழுட்டி உட்டறணும். கண்ணந்தங்கூட்டமோ காடகூட்டமோ கிரிப்பு நம்மகிட்ட இருக்கணும்னு அமெரிக்காவுலயே பழந்தின்னு கொட்ட போட்ட அப்புச்சிக நினைக்கிறாங்க. நமக்கு தெரியாத பாலிடிக்ஸ்சா? இது தா கூட்டமைப்பாச்சே, ரூல்ஸை மாத்துனா மட்டும் வேல முடியாது. அங்கங்க நேக்கா சொருவனும். அப்படி சொருவுனத எல்லாம் வரிசையா பாக்கலாம்.
தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புல எந்தெந்த ஊர்ல இருக்குற சங்கம்லாம் நம்ம ஆளுக கைல இருக்குன்னு பாக்கணும். நம்ம ஆளுகன்னா, எப்பிடி கண்டுபுடிக்குறது? நூலா இருக்குது முதுக நெரவி கண்டு புடிக்க? அதுக்கு தா பழக்கம் வேணும். நம்ம அப்புச்சி பொடக்காலிக்கும் அவிய பங்காளி தோட்டத்துக்கும் ஒரே பொளின்னு போன வருச பெட்னாவுல எதார்த்தமா சொல்லிருந்தம்னா இந்த வருசமே உள்ள வந்துரலாம். சாதாரணமா முன்ன நின்னு வேல செய்யலன்னாலும் உள்ள எப்பிடி கொண்டு வரது? அதும் அட்லாண்டா, டல்லாஸ் மாதிரி வேற வேற சங்கத்துல இருக்கவங்கள? அவிங்க சங்கத்த வேற விஷயமா கூப்புட்டு, 'இந்த வருஷம் உங்க பிரதிநிதியா இவுரு வந்தா என்ன? போன வருஷம் வந்தாரு, தெரிஞ்ச முகம், நல்லா செய்யிறாப்ல' அப்படின்னு பேச்சோட பேச்சா சொல்லணும். அவுங்களுக்கு என்ன தெரியும்? சரி கேக்குறாங்களேன்னு சந்தோஷமா அனுப்பி வைப்பாங்க. அவுங்கள லிஸ்டுல சேத்துக்கலாம். (அடலாண்டா, டல்லாஸ் etc. தமிழ்ச் சங்கங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். நீங்க அனுப்புன ஆளு கேட்டு வாங்குன கவுண்டரா இருப்பாரு)
எதுலையுமே நம்ம பேரு வரக்கூடாது. ஆனா நம்மை கை பெரிய கையா இருக்கணும். மூச்சு கூட நம்மள கேட்டு தா வுடனும், ஆனா நம்மள கேக்குறாங்கன்னு தெரிய கூடாது. இது கிங் மேக்கிங் கவுண்டர்.
நாங்க பெரியார்வாதிகள் அப்படின்னு சொல்லிக்கணும். ஆனா அது பார்ப்பன கும்பலை விரட்ட மட்டுமே பயன்படுத்தனும். நமக்கு கீழ இருக்குற சாதிகளை கை தூக்கி விடவோ, போர்டுல அவங்கள சம அந்தஸ்துல சேத்துக்கவோ அவர்களின் திறமைக்கான மரியாதையோ மறந்தும் செய்து விடக்கூடாது. அவன் சொந்த சாதிக்காரனாவே இருந்தாலும், அவன் நிஜமா சாதியை கேள்வி கெட்டவனா இருந்தா அலுங்காம ஒதுக்கிரனும். உதாரணத்துக்கு பெருமாள் முருகன். அவரை அழைக்க கடந்த வருடம் 'நிஜமாவே' முயற்சித்தப்போ நிறைய ஆண்ட சாதி பூனைக்குட்டிகள் வெளிய வந்திருச்சு. அவர் கவுண்டக் கலாச்சாரத்தை இழிவு படுத்திட்டாராம். அதென்ன 'நிஜமாவே' அழைக்கிறது?
அழைக்கிற லிஸ்டு ரெடி பண்ணும்பொழுது அதுல எல்லாரு பேரும் இருக்கும். அதாவது சாதி மத வேறுபாடு இல்லாம. நாங்கல்லாம் பெரியாரிஸ்டுக இல்லே? அவங்களுக்கு முறையா அழைப்பு கொடுத்து, விசா ரெடி பண்ணுறதுக்கெல்லா ஒரு குழு இருக்கும். அதுக்கு நம்மாளு தா பொறுப்பா இருப்பான். அப்புறம் என்ன, எழுத்தாளர்களுக்கு எல்லாம் அழைப்பு அருமையா போவும். ஆனா விசா டாக்குமெண்ட் ரெடி பண்ணும்பொழுது தான் சில பேருக்கு மட்டும் பிந்தியே போவும். அது அவங்களுக்கும் தெரியாது. கடைசில, விசா பிரச்சினையின் காரணமா வர முடியலன்னு முடிச்சிரணும். ஆனா பாருங்க, இந்த நடிகர் நடிகைகள், நம்ம சாதிக்கார சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் அந்த பிரச்சினை வராது. இந்த பிரச்சினைக்கு அப்புறம் ஓட்டு போட்டு அழைக்கணும்னு ரூல்ஸை மாத்தியாச்சு. யாருகிட்ட? இனிமே யாரு சாதியோட உரசாம இருக்குறாங்களோ அவுங்களுக்கு மட்டும் ஓட்டு விழும். ஏன்னா எல்லாம் நம்மாளுக பாரு? இந்த துள்ளிக்கிட்டு திரியிற பொடிப் பசங்கள்லாம் வேலை மட்டும் செய்யலாம். இதுல போர்டுல இருக்குற ஆண்டைகள் எதுவும் வளஞ்சி வேல செய்யாது. அப்படியே மேம்போக்கா பாத்துட்டு 'ஏய் நீ அத செய்டா..' 'ஏய் நீ இத செய்டா' அப்படின்னு உத்தரவு மட்டும் போடுவாங்க. அவ்ளோ தான். கிட்டத்தட்ட நவீன பண்ணை அடிமை முறை.
நம்ம டவுசர் கலர் என்னன்னு கண்டுபுடிக்கிறது மட்டுமில்லாம அத வெளில விடுறது யாருன்னு பாத்து தூக்கிரனும். ஆனா அவன் அந்த வேல பாத்தானான்னு கண்பார்ம்லாம் பண்ணிக்க தேவை இல்ல. நாம தான நாட்டாமை? ஆனா வெளில வரும். கேள்வி கேக்குறவன அடக்கி தானே நமக்கு பழக்கம், சற்சூத்திர புத்தி அப்படி தா வேலை செய்யும். கத்திரிக்கா முத்தி பழுத்தும் போச்சி. இப்ப, சங்கத்தை செழிப்பாக்க இடதும் இல்லாத வலதும் இல்லாத நடு செண்டரை கூட்டிட்டு வரீங்க இல்லே? அவுரு இந்த வருஷம் விட்டா அரை மணி நேரம் ஆத்துவாரு. ஏன்னா கட்சியை வளக்கணும், காசு வேணும். தொண்ணூறுகள்ல நியூஜெர்சி விழாவுக்கு வந்தப்ப அந்தாளு பேசுனா வீடியோ இருந்தா போட்டு பாருங்க. வெறும் வணக்கம் வச்சிட்டு போயிருப்பான். டாப் ஹீரோ வரதே பெருசுல்ல? இதுக்கு கிட்டத்தட்ட முப்பதாயிரம் டாலர் செலவு பண்ணிச்சி சங்கம். இவங்க சந்தேகத்துக்கு தூக்கின பயக அப்ப டவுசரை போட்டுட்டு பள்ளிக்கூடம் போயிட்டு இருந்திருக்கும். அப்புச்சிகள சந்தேகப்படுங்கப்பு. இப்ப ஓசில வேல பாக்க கிடைச்ச ஆளும் போச்சு இல்ல?
இதுல நிஜமாவே வேல பாக்குற சில பேரு நல்லா பண்ணிரனும்னு வேல பாத்தாக்க அவுங்கள எப்பிடி நிறுத்துறது? இங்க தான் முதலாளி - ஆண்டை - நட்பு கூட்டு களவாணி வேலை பாக்கணும். காச நிப்பாட்டுனா என்ன பண்ணுவானுவ? பேசாம பெட்னா பிரைவேட் கம்பெனின்னு வச்சிருக்கலாம். போன வருசம் மூணு லட்சம் டாலராய் இருந்த பட்ஜெட் இந்த வருசம் இருவது லட்சம் டாலராய் எப்படி வீங்குச்சின்னு பாத்தா போன வருஷம் பெருமாள் முருகன் பிரச்சினைல சைடு வாங்குன கவுண்டனுக யாருன்னு தெரியும்.
ஒவ்வொரு வருசம் சுணங்குறது பிரச்சினை இல்லே. வர வர மாமியா கழுத போல ஆனாளா ன்னு ஆத்தா சொல்ற சொலவடைக்கு தகுந்தாப்ல பெட்னா நிகழ்ச்சி விருந்தினர்கள் இருந்தா என்ன செய்யிறது? சாதிக்கார பயலுவள பாக்கு வச்சி அழைக்கிறது சரி.. போன வருசம் சிவசேனாபதிய போராளின்னு கூப்புட்டு ஒப்பேத்தியாச்சி. இந்த வருசம் ஆதி. (லாரன்ஸ் எங்கடா? ஓஓ அவரு கொங்கு குலச் செல்வன் இல்லியோ!!) பெருமாள் முருகன் நாவல்ல நாலு வருஷம் கழிச்சி நாலு பக்கத்தை படிச்சிட்டு போராட்டத்துக்கு டவுசரை மாட்டிட்டு கிளம்புன கூட்டத்துக்கு சப்போர்ட் பண்ணவங்க தானே நீங்க? இப்ப 'கிளப்புல மப்புல பொம்பளை'ன்னு பாட்டு படிச்ச போராளிய கூட்டியாந்து குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நடுவாரா போட்டு… இப்பிடியே போனா அடுத்த வருசம் சர்க்கஸ்ல ரிக்கார்ட் டேன்ஸ் போடுவீங்களானு எங்க மச்சாண்டாருக்கு ஒன்னு விட்ட பங்காளி கேக்குறாப்ல. அதுக மனசுல என்ன அசிங்கத்த விதைக்குறோம்னு தெரிஞ்சு தா செய்யுறீங்களா? சாதிக்காரனா பிரபலமா இருந்தா மலத்தை தூக்கி மேடையிலே வைப்பீங்களா? பெரியாரை பேசி வளர்ந்து பெண்ணியமும் சாதி மறுப்பும் பேசிக்கொண்டிருக்கும் இன்றும் மரியாதையுடன் பார்க்கப்படும் ஒரு தமிழ்க் கூட்டமைப்பின் இந்த நிலை பரிதாபத்துக்குரியது.
இந்த மேற்கு மாவட்டங்களை சேர்ந்த கவுண்டர் சாதி வெறிக் கும்பல் அடிப்படையில் வலதுசாரி மனநிலை கொண்டது. வலதுசாரி கும்பலை உள்ளே சேர்க்க ஏற்கனவே வேலைகள் ஆரம்பமாகி விட்டது. சும்மா சொல்லக்கூடாது, ஒரு வருடம் கடுமையாய் உழைத்திருக்கிறார்கள். இனி பெட்னா நீர்த்துப்போகத் துவங்கும். அப்புறம் தமிழ் ஒரு போர்வையாய் மட்டுமே பயன்படும். அரசாங்கத்துடனும் அதிகார வர்க்கத்துடனும் கொள்ளும் உறவு மேற்கு மாவட்டங்களில் இருக்கும் வியாபார காந்தங்கள் வளருவதற்கு உறுதுணையாய் இருக்கலாம். ஆனால் அதை உருப்படியாய் வேலை செய்துகொண்டிருக்கும் தமிழ்ச் சங்கங்களை ஏமாற்றி சேர்த்துக்கொண்டு சாதியை வளர்த்து அதிலே குளிர்காய்வது அருவறுக்கத்தக்கது. இப்படியே போனால் தமிழுலகம் உங்களை மன்னிக்காது.
இது வரைக்கும் அரசுகளின் தயவு இல்லாமல் அரசியல் மற்றும் சமூகம் பேசிக்கொண்டிருந்த ஒரு அமைப்புக்குள் அரசு மற்றும் அதிகார மையம் சிறிது சிறிதாய் தனது கரங்களை பாவத் தொடங்கி இருக்கிறது. காசில்லாமல் கீழடியை மூடிய தமிழக அரசு பெட்னாவுக்கு ஒரு கோடி எதற்கு தர வேண்டும்? அதிமுகவில் இருக்கும் ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் செல் மாஃபா பாண்டியராஜன் எதற்கு அரசு பணத்தை இதற்கு ஒதுக்கணும்? அமெரிக்காவில் செயல்படும், தமிழர்களை ஒருங்கிணைக்கும், சக்தி வாய்ந்த, முக்கியமாக, பார்ப்பனீய ஆதிக்கத்தை தன்னுள் அனுமதிக்காமல் இருக்கும் பெட்னா போன்ற ஒரு மிகப்பெரிய கூட்டமைப்பு, கொஞ்சம் கொஞ்சமாக தமிழுணர்வை விழுங்கி தேசியவாதத்தை தூக்கிப்பிடிக்கும் போக்கு எவ்வாறு இந்த அமைப்புக்கே ஆபத்தாய் வந்து சேருகிறது என்று உணர்ந்து சுதாரித்துக்கொள்வோமா? இதற்கெல்லாம் ஒரு கட்டுரை போதுமா? இன்னும் வரும்.
No comments:
Post a Comment