அவசர அவசரமாக நம்மை சாதியற்றவர்களாய் அறிவித்துக்கொள்ள பரபரக்கிறோம், அப்படியே அதன் வெளிப்பாடு நம்மை உறுத்தும் வேளைகளில் சாதியை கண்டும் காணாமல் கடந்துவிட துடிக்கிறோம். எரிச்சலூட்டும் இத்தகைய பொது புத்தியில் சாதி தான் நமது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் வடிவமைக்கிறது என்பதை வசதியாய் மறந்துவிடுகிறோம். ஆனால் அதை புரிந்துகொள்ளும்போது நமது நட்பையும் உறவுகளையும் அதே ரீதியில் தக்கவைத்துக்கொள்வது கடினப்பட்டுப் போகிறது.
இந்த விழிப்புணர்வு அல்லது 'புரிதல்' ஏற்படும்போது, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சிறார்களின் அன்றாட வாழ்வின் சிரமங்கள் அதிகமாகிறது. உயர்நிலை வகுப்புகளில் இருந்தபோது, நான் எவ்வாறு பொதுவில் 'பொருந்தாத' ஒருத்தியாய் இருக்கிறேன் என்பது அவ்வப்போது உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கும். என்னுடன் படித்த உயர்சாதிப் மாணவியர் என்னுடைய 'எண்ணெய் வழியும்' தலையையும், நடுவில் அல்லாமல் ஒருபுறமாய் வாக்கெடுத்து பின்னியிருக்கும் இரட்டை சடையையும் கேலி செய்யாத நாட்களே இல்லை.
அவர்கள் எனக்கு பட்டப்பெயர்களை வைத்து அழைத்தார்கள். அவர்கள் என்னை அழைத்து ஆங்கிலத்தில் பேசவைப்பார்கள் - நான் எப்படி ஆங்கிலத்தை உச்சரிக்கிறேன் என்று பார்ப்பதற்காக. "உன்னை எங்களுக்கு பிடிக்காது" என்று முகத்துக்கு நேராய் சொன்னார்கள். இன்னும் சற்று வளர்ந்த பின்னர், அவர்கள் நேரடியாய் சாதி பற்றி பேசினார்கள். உறவுகள் பற்றி பேசினார்கள். பறையர்கள் எவ்வளவு வெறுக்கத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்றும் பேசினார்கள்.
ஒருமுறை ஹாலிவுட் படங்களை விரும்பி பார்க்கும் மாணவி ஒருத்தி "ஸ்பீட் திரைப்படத்தின் கதாநாயகி யாரென்று உனக்கு தெரியுமா" என்று என்னிடம் கேட்டாள். "சாண்ட்ரா புல்லக்" என்று சொல்லிவிட்டு, "உனக்கெப்படி இது தெரியாமல் போனது.." என்று கேட்டேன். அவள் "எனக்கு தெரியும், உனக்கு தெரியுமா என்று சோதித்து பார்த்தேன்" என்று சொன்னாள். ஹாலிவுட் படங்களை பற்றி எனக்கு தெரிந்திருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
தேவாலயங்கள் ஒன்றும் இவற்றிலிருந்து வேறுபடவில்லை. அவர்கள் அங்கேயும் இருந்தார்கள். அவர்கள் கல்லூரியிலும் என்னை பின்தொடர்வார்கள் என்கிற நினைப்பே சில்லிடும் பயத்தை தந்தது. ஆனால் பள்ளியில் நடந்த கொடுமைகளெல்லாம் இனி வரப்போவதற்கு அருகில் ஒன்றுமேயில்லை என்று வெகுவிரைவில் அறிந்துகொண்டேன். சென்னையில் நன்றாய் அறியப்பட்ட ஒரு பெண்கள் கல்லூரியில் சேர்ந்தேன். ஊகிப்பது ஒன்றும் கடினமல்ல. அது ஒரு பழமை வாய்ந்த கல்வி நிறுவனம். அவர்களின் பாரம்பரியம் பெருமைக்குரியது என்று என் தாயார் கருதினார்.
ஆனால் பாரம்பரியங்களும் மோசமானதாய் இருக்கக்கூடும். பாரம்பரியத்தின் பெயரால் எதைவேண்டுமானாலும் நியாயப்படுத்த முடிகிறது. ராகிங் கொடுமைகளையும் சேர்த்து. புது மாணவர்கள் அனைவரையும் ஒருநாள் மாலை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். (பல நாட்கள் எங்களை கேலிக்குள்ளாக்கி பரிகாசித்த பின்னர்) அங்கு சென்ற பின்னரே எங்களுக்கு தெரிந்தது, அது விருந்தின் பெயரால் எங்களை மேலும் அவமானப்படுத்துவதற்காய் கூடியிருக்கிறார்கள் என்பது. அன்று அவர்கள் அரங்கேற்றியது இன்றளவும் நினைத்துப்பார்க்கவே அச்சமூட்டுவதாக இருக்கிறது.
மிச்சமிருந்த எனது கல்லூரி நாட்களும் எதிர்நீச்சலாகவே இருந்தது. சாதாரணமாய் பொருட்படுத்த தகுதியற்றவை கூட சாதி மற்றும் வர்க்க அடையாளங்களாய் உருவெடுத்தது. தோலின் நிறம், உடல் வடிவம், அணிந்திருந்த உடை, அதன் தரம், பிராண்ட், கல்லூரிக்கு எப்படி வருகிறேன், ஆங்கிலம் எப்படி பேசுகிறேன், வீடு எங்கே இருக்கிறது, தாய்மொழி, பெற்றோர் செய்யும் தொழில் - இப்படி எண்ணற்ற அளவீடுகள். இது சென்னையில், ஒரு கிறித்தவ கல்லூரியில். அது எனக்கு வீடு போல உணர வேண்டுமல்லவா? எனக்கு அது நரகம் போல இருந்தது.
அத்துணை காலமாய் இந்த சிறப்புரிமை பெற்ற உயர்சாதிப்பெண்கள் ராகிங் மற்றும் அதையொத்த கொடுமைகளுக்கு மேலதிகமாய் செய்துவிட்டார்கள். ஒருமுறை ஒரு நன்கு அறியப்பட்ட ஒருபால் ஈர்ப்பாளர் & ஆதரவாளர் ஒருவரது தாயார் தனது மகனுக்கு ஐயர் சாதி மணமகன் தேவை என்று விளம்பரம் செயதிருந்தார். அதை விமர்சித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். என்னுடைய பள்ளி தோழியொருத்தி - அவர்களின் நண்பி - என்னையும் அவர்களின் வழக்கறிஞர்களையும் கட்டுரையில் இணைத்து என்மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு தொடுக்கவேண்டும் என்று ஒரு இடுகை இட்டிருந்தாள். எதற்கு தெரியுமா? "பார்ப்பனர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில்" பேசியதற்காக. அவள் இடைவிடாது இணையத்தில்/சமூக வலைத்தளங்களில் துன்புறுத்திக்கொண்டே இருந்தாள் - வேறு வழியின்றி அவளை என் தொடர்பிலிருந்து முடக்கும் வரை. அவள் தன்னை ஒரு பெண்ணியவாதி என்று அடையாளப்படுத்திக்கொள்கிறாள். எழுத்தாளர் கூட. #MeToo இயக்கத்தில் அவளுடைய குரல் தனித்து வெளிப்பட்டது ஒன்றும் ஆச்சரியமானதில்லை.
இந்த உயர்சாதிப்பெண்கள் பலர் என்னுடைய தனிப்பட்ட உறவுகளிலும் நட்பிலும் முறிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதிலே சிலர் சாதிக்கு எதிரான கூட்டணியாய் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டு தேர்ந்த வேடதாரிகளாய் வலம் வருகிறார்கள். சாதி அந்தஸ்து கொண்டவர்களால், அதிலும் 'முற்போக்குவாதிகளால்' தகாத முறையில் ஏசப்படுவது நீண்டகாலமாய் இருந்துவருகிறது. ஏன், அது ஒரு வாழ்வியல் முறையாய் ஆகிவிட்டதென்றே சொல்லலாம்.
என்னளவில் இந்த உயர்சாதிப்பெண்களுடனான நட்பு மிகவும் கடினமானதும் மனக் கொதிப்பை தரக்கூடியதுமாகவே இருந்துவந்துள்ளது.. அவற்றில் மனத்துயரை தராத உறவுகள் பாகுபாட்டை கற்றுக்கொடுத்தன. என்ன இருந்தாலும் நாங்கள் அவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் இல்லையா? எங்களுடைய பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றின் தீர்வுகள் (நீங்கள் உணராத, ஆனால் உங்களிடமிருக்கும்) சிறப்புரிமை சார்ந்தவை. பெண்ணியத்தின் வாயிலாக அறியப்படும் ஒற்றுமையின் அடிப்படையே அர்த்தமற்று போய்விட்துபோல தோன்றுகிறது. அந்த சகோதரத்துவத்தில் என்னை ஆழ்த்திக்கொள்ள என்னில் எதையெல்லாம் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு துரோகமிழைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஆற்றலுடன் திகழும் உயர்சாதிப்பெண்களை ஆராதிக்க என் மனம் ஒப்பவில்லை. அந்த ஆற்றலுக்கான விலை - எங்களிடமிருந்து உறிஞ்சப்பட்டது. என்னை மிதித்தேறிப் போனவளின் உயர்வை நான் எப்படி கொண்டாடமுடியும்?
என்னளவில் இந்த உயர்சாதிப்பெண்களுடனான நட்பு மிகவும் கடினமானதும் மனக் கொதிப்பை தரக்கூடியதுமாகவே இருந்துவந்துள்ளது.. அவற்றில் மனத்துயரை தராத உறவுகள் பாகுபாட்டை கற்றுக்கொடுத்தன. என்ன இருந்தாலும் நாங்கள் அவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் இல்லையா? எங்களுடைய பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றின் தீர்வுகள் (நீங்கள் உணராத, ஆனால் உங்களிடமிருக்கும்) சிறப்புரிமை சார்ந்தவை. பெண்ணியத்தின் வாயிலாக அறியப்படும் ஒற்றுமையின் அடிப்படையே அர்த்தமற்று போய்விட்துபோல தோன்றுகிறது. அந்த சகோதரத்துவத்தில் என்னை ஆழ்த்திக்கொள்ள என்னில் எதையெல்லாம் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு துரோகமிழைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஆற்றலுடன் திகழும் உயர்சாதிப்பெண்களை ஆராதிக்க என் மனம் ஒப்பவில்லை. அந்த ஆற்றலுக்கான விலை - எங்களிடமிருந்து உறிஞ்சப்பட்டது. என்னை மிதித்தேறிப் போனவளின் உயர்வை நான் எப்படி கொண்டாடமுடியும்?
நாம் உருவாக்க நினைக்கும் புதிய உலகில் இத்தகைய போலித்தனங்களும் பாகுபாடுகளும் குறைந்திருக்கும் என்று நம்புகிறேன். எந்த ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணும் தன்னை போதாமைகள் நிறைந்தவளாகவோ அசிங்கமானவளாகவோ உயர்சாதி பெண்களால் உணரவைக்கப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன். உயர்சாதிப்பெண்களுக்கு இது எவ்வளவு கடுமையான பிரச்சினை என்று புரிய வேண்டும்.
தாழ்த்தப்பட்ட பெண்களும் மனிதர்களே. அதாவது நங்கள் ஒன்றும் அவ்வளவு வித்தியாசமானவர்கள் இல்லை. உங்களுக்கிருக்கும் அன்பு, மரியாதை, சுதந்திரம் - அனைத்தும் எங்களுக்குமானது. நாங்கள் அழகானவர்கள். உங்களுக்கு சமமானவர்கள். நாங்களும் கொண்டாடப்பட உகந்தவர்களே.
இதை படிக்கும் நீங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணாய் இருப்பின், இங்கே பேசப்பட்டவைகளில் சிலவற்றை நீங்களும் எதிர்கொண்டிருக்கக்கூடும். உறுதியாய் இருங்கள், சகோதரிகளே. நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம். நீங்கள் உயர்சாதி பெண்ணாய் இருப்பின் இந்த கேள்விக்கு பதில் தேட முயலுங்கள்: எங்கள் மகள்களையாவது நீங்கள் சரியாக நடத்துவீர்களா?
Source: https://www.facebook.com/sudhanthira.dhanaraj/posts/10157998050229447
No comments:
Post a Comment