"தீண்டத்தக்க இந்துக்களை மாற்றுவதற்கு ஏதேனும் செய்வோம்" என்று யாரும் சொல்லி கேட்பது அபூர்வம் - Dr. அம்பேத்கர்.
"உண்மைய சொல்லப்போனா, அறிவாளிகளை தாண்டிய விதிவிலக்காய் இருந்திருக்காவிட்டால் நான் எப்போதோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்"
அவன் சொன்ன வார்த்தைகள் என் எலும்புகளை சில்லிடச் செய்தது. பல வருடங்களாய் அவனை அறிந்திருந்தவன் என்கிற வகையில் அவன் வெற்று வார்த்தைகளால் மிகைப்படுத்தி நாடகமாடி கவன ஈர்ப்பு செய்ப்பவனல்ல. அவன் வார்த்தைகளில் உண்மை இருந்தது. மனதின் நடுக்கத்தினூடாய் நான் உணர்ந்தவை இவை: சுமாராக படிப்பவனாய் இருந்த போதிலும், அவனுடைய இழிநிலைக்கு ஒருவகையில் காரணமானவன். அதுபற்றி நான் அறிந்துகொள்ளவேண்டியது ஏராளம்.
தன்மயியும் நானும் மதிய உணவின்போது பேசிக்கொண்டிருந்தோம். அவனுடைய இளமைக்காலம் மற்றும் பின்புலம் பற்றிச் சொல்லுமாறு கேட்டேன். மிகத்தன்மையாக, ஆர்வமும் அர்பணிப்புமாய் அதுபற்றி எனக்குச் சொல்ல ஒப்புக்கொண்டான். எத்துணை விரிவுரைகளும், புத்தகங்களும் ஆவணப்படங்களும் அளித்திருக்கமுடியாத ஒரு புரிதலுக்கு தன்மயி மற்றும் அவனுடைய பிரதிநித்துவபடுத்திய உலகம் என்னை ஆயத்தப்படுத்தியது. எங்களைக் காண்போருக்கு நாங்கள் இருவரும் மதிய உணவின்போது அரட்டையடித்துக்கொண்டிருக்கும் குடியேறிகளாய்த் தெரிந்தாலும், உண்மையில் இத்தகைய உரையாடல் என்பது தார்மீக அடிப்படையிலும், புள்ளிவிவர அடிப்படையிலும், நேர்மையாக சொல்லப்போனால் நிகழ்தற்கரிது. நாங்கள் இருவரும் வளர்ந்த சூழ்நிலையும், வாய்ப்புகளில் இருந்த வேறுபாடுகளும் மிகவும் ஆழமானது. வெவ்வேறு தளங்களில் இருந்த பாகுபாடுகள் உள்நோக்கங்களுடன் கட்டமைக்கப்பட்ட வஞ்சகம் நிறைந்த அநீதி ஆகும். அதற்கு ஒரே காரணமாய் அமைந்தது நான் ஒரு உயர் சாதி இந்து என்பதும் தன்மயி ஒரு தலித் என்பதுமே ஆகும். எங்களை இந்த இடத்தில் ஒன்றாய் வெற்றிகரமான பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியர்களாய் அமர்த்திய கதை மேடுபள்ளங்கள் நிறைந்தது. கடுமையான இழப்புகளினிடையே ஒரு அசாதாரண மனவுறுதியியைக் கோருவதாக ஒரு நிலையிலும், தனிப்பட்ட சலுகைகளையும், நடுத்தரமான திறமைகளைக் கொண்டதாக மற்றொரு நிலையிலும் இருந்தது. அந்தக் கடும் இழப்பு தன்மயியுடையதாகவுவம் சலுகைகள் என்னுடையதாகவும் இருந்தது. சாதி அமைப்பு முறை கவனமாய்க் கட்டமைத்த ஏற்றத்தாழ்வுகளும் அது ஏற்படுத்தித் தந்த சமத்துவமற்ற பொருளாதாரமும், வாய்ப்புகளுமே அதன் அடிப்படைப் பாடமாய் இருந்தது.
தன்மயியின் கதையில் எனக்கு ஆர்வம் தோன்றியது ஒரு தனிக்கதை. அண்மையில் குடியேறிய இந்த நாட்டில் நிலவிவரும் இனப்பாகுபாடு குறித்த பகுப்பாய்வுகள், நான் வளர்ந்த இந்தியச் சூழலை ஒப்புநோக்கக்கூடியதாய் இருந்தன. "" என்றழைக்கப்படும் வெள்ளை இனத்தவருக்கு அடிப்படையிலேயே கிடைக்கும் அமைப்புரீதியிலான சலுகைகளை புரிந்துகொண்டதன் விளைவாக, நிறவெறிக்கு எதிராய் இன நீதிக்காய் உறுத்தலின்றிப் பேசவும் செயல்படவும் இயலவில்லை. ஏனென்றால் அதற்கு முன்னதாக எனக்கு, நான் பிறந்த சாதியின் அடிப்படையில் கிடைத்த சலுகைகளை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.
நான் இன்று என்னவாய் இருக்கிறேனோ, அதை சாதிக்க சிறப்புச்சலுகையுடன் கூடிய பாதை அமைத்துக்கொடுத்த சாதி முறை தான் தன்மயியின் ஒவ்வொரு அடியையும் கவனமாய்த் திட்டமிட்டு சறுக்கச் செய்தது. தொழில்ரீதியிலான பிறப்பின் அடிப்படையிலான, சிக்கலான சாதிக் கட்டமைப்பை பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கக் கூடும். பலநூறு வருடங்களாக இந்திய சமூகத்தின் கட்டுமான அடித்தளமாகத் திகழ்கிறது. பெரும்பாலானோருக்கு இதுபற்றித் தெரிந்திருந்தாலும், வெகு சிலரே இன்றும் வேர்விட்டிருக்கும் அதன் உறுதியையும், அது கோடிக்கணக்கான மக்களை விரும்பத்தகாதவர்களாக ஆக்கி வைத்திருக்கும் கொடுமையையும் அறிவார்கள். அது ஒரு இருண்ட உலகம்.
எனது பயணம்:
பெரும்பாலானவர்கள் பட்டதாரிகளாய் இருந்த குடும்பத்தில் பிறந்தது என் அதிர்ஷ்டம். பாலினப் பாகுபாடுகள் மிக மோசமாய் இருந்தபோதிலும் எனத குடும்பம் நல்ல நிலையிலேயே இருந்தது. ஆண்கள் மத்திய தர ஆடம்பர வசதிகளை அமைத்துக்கொள்ளும் அளவிற்கான நிலையான வேலை இருந்தது. காலனியாதிக்கத்தின் கொடிய வறுமையிலிருந்து மீண்டுகொண்டிருக்கும், பாரிய ஏற்றத்தாழ்வை தன் இயல்பிலேயே தரித்திருக்கும் ஒரு நாட்டில் இது ஒரு பொருளாதார சாதனையே. எனது முன்னோர்கள் சிறு வியாபாரிகளாகவும் வர்த்தகர்களாகவும் இருந்தபோதிலும், எனது இரு பாட்டனார்களும் தொழிற்கல்வி முடித்து புதிதாய் சுதந்திரம் பெற்று, வளரும் இந்தியாவில் பதவி வகித்தனர். என் தலைமுறை வந்தபோது வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் நிறைவுற்றே இருந்தது. எனது குழந்தைப் பருவமும் வளரிளம் பருவமும் அந்த சலுகை எனக்களித்த மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
தன்மயி அவ்வளவு அதிர்ஷ்டக்காரனாய் இல்லை. சாதியின் பற்சக்கரத்தில் சிக்கிய அவனுக்கு சிரமங்களும் பாகுபாடுமே அவனது பிறப்புரிமையாக இருந்தது. கல்வியும் அதற்கான உரிமைகளுமே எட்டாக்கனியாய் இருந்தது. என் குடும்பத்தார் தொழில்முறை பதவிகளில் இருந்தபோது அவனுடைய குடும்பத்தார் இறந்த கால்நடைகளின் தோலை உரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரக்கணக்கான வருடங்கள் தலைமுறை தலைமுறையாக அவர்கள் "கடவுளால் விதிக்கப்பட்ட" இந்த அபாயகரமான இழிவுறு தொழிலில் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தார்கள். அந்த விஷவளையத்திலிருந்து தப்பி வெளியேற முயற்சித்தவர்கள் கடுமையாய் தண்டிக்கப்பட்டனர். 1947 - சுதந்திரத்தின்போது அவனுடைய இரு பாட்டனார்களும், இந்தியாவின் ஒரு மூலையில் இருந்த கிராமப்புறத்தில் இந்த தோலுரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒரு பெரும் குழுவின் சிறு பகுதியாய் இருந்தனர். இன்று அவர்களின் எண்ணிக்கை 20 கோடிக்கும் அதிகம். அவர்கள் தலித்துகள் என்றழைக்கப்படுகின்றனர். பொது மொழியில் "தீண்டப்படாதவர்கள்".
தொழில் சார்ந்த இத்தகைய அதீத ஏற்றத்தாழ்வுகளும் அது சார்ந்த கொடுமைகளும் அவனது சமூகத்தில் ஏற்படக் காரணம் தற்செயலானது அல்ல. ஒரு தீர்மானத்துடன் உருவாக்கப்பட்டு கவனமுடன் திட்டமிட்டு திணிக்கப்பட்ட அடிமை முறை ஆகும். இது உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் அது அவர்களின் மதத்தின் ஒரு பகுதியாய் பிறப்பிலேயே வழங்கப்படுகிறது.
சாதியை பற்றி முதலில் நான் அறிந்தபோது எட்டு வயது இருக்கும். எனது குடும்பப் பெயரின்படி நாங்கள் 'பனியா' சாதியை சேர்ந்தவர்கள் என்பதாக என் தாயார் கூறினார். அப்போது எனக்கு சரியாய் புரியவில்லை என்றபோதிலும், 'வைசியர்கள்' எனப்படும் வணிக சாதியைச் சார்ந்த உட்சாதி என்பதைப் பின்னாளில் அறிந்துகொண்டேன். அப்போது பிராமணர், சத்திரியர் போன்ற உயர் சாதிப் பிரிவுகளைப் பற்றியும் அறிந்திருந்தேன். இந்த பெரும் பிரிவுகள் வர்ணம் என்று அழைக்கப்பட்டது. "நால்வர்ணம்".
வளரிளம் பருவத்தில் நான் சாதியைப்பற்றி அதிகமாய் யோசித்தது இல்லை. ஒருவிதத்தில் நான் கொடுத்துவைத்தவன்தான். பெருநகர காஸ்மோபாலிடன் சூழலில் பல்வேறு விதமான மக்களுடன், எங்களுடைய வரையறையின்படி 'நவீன' தோற்றத்தில் வாழ்ந்துவந்தேன். அப்போது நாங்கள் 'இசங்களை' எல்லாம் கடந்துவிட்டதாகவும், ஒரு உலகளாவிய கண்ணோட்டத்தை அடைந்துவிட்டதாகவும் எண்ணிக்கொண்டிருந்தோம். அது எவ்வளவு தவறானது! எனது இளம்பிராயத்தில் ஒரு தலித் நண்பனோ அல்லது குடும்ப நண்பரோ இருந்திருக்கவில்லை. உலகின் பொதுமையை அடைந்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு, பாகுபாட்டின் மையத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம். அப்போது 'நவீன'த்தின் பெருமையில் களிப்பெய்திக்கொண்டிருந்தோம்.
என்னுடைய கருத்துமுதல்வாத அறியாமையினால், வரலாற்றில் சாதி அமைப்பின் வலிமை பற்றித் தெரிந்திருந்தும் அதன் வீரியம் குறைந்துவிட்டதாகவே எண்ணினேன். பெரும்பாலானோர் சுய சாதியிலேயே திருமணம் செய்துகொண்டனர், சாதி மாறி மனம் செய்துகொண்டவர்கள் மிகமோசமாய் நடத்தப்பட்டனர். ஆனால் பெரும்பாலும் மிக மோசமான அழிவை நோக்கிச் செல்வதை நிறுத்திவிட்டதாகவே கருதினேன். ஏனென்றால், என்னுடைய குடும்பத்தையே எடுத்துக்கொள்ளுங்கள், என் தந்தையார் ஒன்றும் சிறு வணிகர் அல்ல. புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் ஒரு விஞ்ஞானி. இந்தியா ஒரு முற்போக்கான அரசியலமைப்பைக் கொண்ட, குடியுரிமை பற்றிய ஒரு தீர்க்கமான வரையறை கொண்ட, ஒரு நவீன வளரும் நாடு. அப்படியே சாதியின் மிச்ச சொச்சங்கள் இருந்தாலும் அது மிக குறைவே. தீண்டாமை இருக்கலாம், ஆனால் அது எனது சமூகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அல்ல, அது அழிவின் விளிம்பில் இருக்கிறது. படித்த அறிவாளிகள் பலரும் இதே கருத்தையே கொண்டிருந்தனர். கடந்து போனதை மறப்போம், எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கிறது.
தன்மயியின் இளமைப்பருவம் என்னுடைய அனுபவத்துக்கு நேர் எதிர் துருவமாய் அமைந்திருந்தது. அவனுடைய சாதிப் படிநிலை மிகவும் ஒடுக்கப்பட்டது. தலித்துகள் என்றழைக்கப்படும் தீண்டத்தகாத வகுப்புகளில் ஒருவனாய் இருந்தது அவனுக்கு ஆரம்பம் முதலே மிக மூர்க்கமான அதிர்ச்சிகரமான அனுபவங்களையே அவனுக்குத் தந்தது. சுற்றியிருந்த அனைவரின் தொழிலும் ஏதோ ஒரு வகையில் இவனை முறியடிப்பதைத் தெளிவாய் உணர முடிந்தது. மேலும் சாதியை காரணமாய் காட்டி அவனை தனிமைப்படுத்திய நிகழ்வுகளே பெரும்பாலானவை. ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 8 வயதில் ஒரு ஆசிரியர் கூறியது "கற்பதை விடுங்கள், இவன் தீண்டக்கூட தகுதியற்றவன்."
பெருமளவில் அழிந்துவிட்டதாக நான் கருதிக்கொண்டிருந்த இந்த சாதி அமைப்புமுறை சமகாலத்தில் என் நண்பனின் அபிலாஷைகளையும் முன்னேற்றத்தையும் அழித்துக்கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை வெறும் கோட்பாடாகவும் கடந்தகால வரலாற்றின் ஒரு பகுதியாகவும் இருந்தது தன்மயிக்கு எதிரில் நிகழ்கால நிஜத்தில், எந்தத் திசையிலும் தப்பிக்கவியலாத வகையில் நின்றுகொண்டிருந்தது. சில பத்தாண்டுகளுக்குப் பின்னர், கற்றலின் விளைவாக நான் அறிந்துகொண்டது - 75%க்கும் மேலான தலித் மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியையே தாண்டுவதில்லை. அதற்கு பொருளாதார காரணங்களாலோ அல்லது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற அதிகாரமிக்க பொது மனிதர்களின் பாகுபாடு மிகுந்த சாதி ரீதியிலான துன்புறுத்தலை உளவியல் ரீதியில் சமாளிக்க முடியாமலோ பள்ளியை விட்டு வெளியேறி விடுகிறார்கள். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் மற்றும் பலரிடமிருந்து ஊக்கத்தையும் ஆதரவையும் மட்டுமே பெற்ற என்னுடைய பள்ளிப்பருவத்துக்கு நேர் எதிரானது இது. இதற்கும் மேலாய், சரியான சமூக தொடர்புகள் - எந்த சலனமும் இல்லாமல் வெற்றி எனது வாழ்வில் எழுதப்பட்டிருந்தது.
தன்மையின் வாழ்வில் இழப்புகளும் அவமானங்களும் தொடர்ந்தே வந்தது. அவனுடைய குடும்பத்தாரும் உறவினர்களும் மட்டுமல்ல, அவனுடைய அண்டை அயலாரும், அவனைச் சுற்றியிருந்த அனைவருக்குமே ஏவலாளிகளாவும், குற்றவேல் புரிபவர்களாகவும், அருவருக்கத்தக்க இழிந்த தொழில்களும் மட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. பொருளாதாரக் கொள்கலனின் அடியில் மீந்திருப்பதை பங்கிட்டுக்கொண்டு, மற்றவர்களால் தீண்டப்படாதவராய் நடத்தப்பட்டனர். அவர்களில் மலம் அள்ளுபவர்களும், காவலாளிகளும், கால்நடை மேய்ப்பவர்களும், சவ அடக்கம் செய்வோரும் இருந்தனர். இவையெல்லாம் தொழில்களாயிருந்தால் என்ன என்று வாதிடலாம். ஆனால் உரையாடல்களில் கெட்ட வார்த்தைகளாய் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அந்த தொழில்களைக் குறிப்பவையாய் இருந்தன. இதுவே அவற்றுக்கு என்ன மரியாதை இருந்தது என்பதை உணர்த்தும். தன்மயி, இதுபோன்ற அவமரியாதைகளை சகித்துக்கொள்வது மட்டுமல்லாது, கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாது, தன்னை சுற்றியிருந்த உயர் சாதிக்காரர்களின் மிரட்டலுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. நீடித்த மனச்சோர்விலும், கையறு நிலையிலும், மற்றவரின் கீழான பார்வையிலும், சிறுமைப்படுத்தலையும் எதிர்கொண்டு வளர்ந்தான்.
ஏட்டுக் கல்வியும் எதார்த்தமும்:
தீண்டாமை என்பது நான் வளரும்போது அறியாத கருத்தாக்கம் என்பதல்ல, அது கடந்தகாலம் என்பது போல ஒரு மாயத் தோற்றம் நிலவியது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தன்மயியின் முன்னோர்கள் பொது இடங்களில் அனுமதிக்கப்பட்டதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். சில பகுதிகளில் அவர்கள் 'தீண்டத்தகாதவர்கள்' மட்டுமல்ல, 'காணத்தகாதவர்கள்' கூட. அவர்கள் கண்டோ கேட்டோ தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முயன்றால் அவர்களின் காதுகளிலும் கண்களிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று வேதங்கள் சொல்கின்றன. இத்தகைய கொலை பாதகச் செயல்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக முன்னறிந்தே உயர் வருணத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகக் கடுமையாய்ப் பின்பற்றப்படுகிறது.
வரலாறு நெடுக எண்ணிலடங்கா எழுச்சிகள் நடந்திருந்தபோதிலும் காலனியாதிக்க இந்தியா இருபதாம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்தபோது தீண்டாமை எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. சுதந்திரப் போராட்டத்தின் கொந்தளிப்பு மற்றும் தன்மயியின் நாயகன் - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை - டாக்டர் அம்பேத்காரின் தலைமைத்துவம் இவற்றின் காரணமாய் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சில சமூக உரிமைகள் கிடைக்கப்பெற்றன - உலகின் மிக விரிவான உறுதியான சமூக நீதி திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது - அது இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதி. ஆனால் பரவலான சாதி கோட்பாடுகளால் கெட்டிப்பட்டுப்போன சமூகத்தில் அது சட்டமாய் இருந்தபோதிலும், பரவலான உரிமையாய் இல்லாமல் பெரும்பாலான சமயங்களில் நிராகரிக்கப்படுகிறது.
சாதியடுக்கில் உயர்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து படிப்பிலும் சொந்த கடமைகளில் மூழ்கியிருந்த என்னைப் போன்றவர்கள் கொண்டிருந்த லட்சிய பிம்பத்துக்கும் தன்மயியின் நிஜ வாழ்வுக்கும் இடையில் இருந்த வேறுபாடு பற்றிய அறிவு எங்களுக்கு கொஞ்சமும் இருக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை தீண்டப்படாதவர்கள் என்போர் வளரும் இந்தியாவில் ஒரு கருத்தாக்கமாகவும் உருவகமாகவுமே இருந்தனர். என் அனுபவத்தில் தீண்டாமை என்பது வரலாற்றுத் தேர்வுகளில் மட்டுமே இடம்பெற்றது. அவர்கள் எனது வாழ்வுக்கு அவசியமான அனைத்து வகையான அடிமட்ட தொழில்களையும் செய்தனர், ஆனால் அவர்களின் முகங்கள் சமூகத்தால் மறைக்கப்பட்டே இருக்கின்றன..
தீண்டத்தகுந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று பாகுபடுத்துவதற்கு எப்படி 'நியாயமான' காரணங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன என்று பார்ப்போம். அவர்கள் செய்யும் வேலைகள் அதாவது, மலம் அள்ளுதல், பிணம் எரித்தல், இறந்த விலங்குகளை கையாளுதல் போன்ற தொழில்கள் அசுத்தமானவை. சாதியடுக்கில் என் போன்ற நிலையில் இருப்பவர்கள் அவர்களது குழந்தைகளுடன் விளையாட சுகாதாரத்தை முன்னிட்டு அனுமதிக்கப்படுவதில்லை. மத மூட வழக்கங்களினால் "தீட்டு" என்று அழைக்கப்பட்டது, நவீன 'அறிவியல் ரீதியான' விளக்கமாக 'அசுத்தம்' என்று அழைக்கப்படுகிறது. முறையான சுகாதார சேவைகளை (link) விடுங்கள், உயர் சாதிக்காரர்களுக்கு வேறு பல தேர்வுகள் இருந்தன.
சாதி பற்றிய எனது தூய்மைவாத ஏட்டறிவு, வலி மிகுந்த நிஜத்தை கண்டுகொள்ளாத வகையில் புத்தியை மழுங்கடித்தது. இந்த கள்ள மௌனம் சாதி ரீதியிலான சிறப்புரிமை கிடைப்பதாலே ஏற்படுகிறது. மேற்குலகில் இனவெறி பற்றிய ஏட்டறிவு அதை அனுபவித்தவர்கள் துயரை மறைத்து நிற்பது போல.
தனிப்பட்ட புரிதலால் ஏற்படும் வருத்தத்தைக் காட்டிலும், அமைப்புரீதியில் இதை புரிந்துகொள்வதே மிக முக்கியமானது. ஒவ்வொரு கணமும் தலித்துகளின் புத்திசாலித்தனமும் நேர்மையும் ஏன், மனிதத் தன்மையுமே கூட கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால் வளங்கள் எதையும் அவர்களுக்கு அனுமதிக்காமல், பொருளாதாரத்தில் அவர்களை அடித்தளத்திலேயே வைத்திருக்க சமூக கட்டுமானம் ஏற்படுத்தியிருக்கும் இடையூறுகள், அவர்களை ஒவ்வொரு அசைவிலும் முடமாக்குகிறது.
நான் இவற்றை அறியாததால் கிடைத்த சிறப்புரிமைகள் அதிகம். ஆனால் தன்மயிக்கு நேர் எதிரானவையே நடந்தது. மிக மோசமான ஒடுக்குதல்களுக்கும் அதிகாரத்துக்கும் அவன் உள்ளாகியிருந்தான். இவற்றையெல்லாம் போராடிக் பெற்ற அவனுடைய இந்த வாழ்வே அவனது மனா உறுதிக்கு சாட்சியாய் இருக்கிறது.
பல்கலைக்கழகம்:
மேற்படிப்புக்கான சூழ்நிலைகள் உயர் சாதியினரையும் தலித்துகளையும் மேலும் பாகுபடுத்துகிறது. சாதி மற்றும் மத அடிப்படைவாதத்தினால் இல்லாவிடில், அந்த மைய நீரோட்டத்தின் பிரச்சாரத்தில் நானும் உள்ளிழுக்கப்பட்டேன். இந்திய பல்கலைக் கழகங்களின் கடும் போட்டி நிறைந்த நுழைவு தேர்வுகளும், உயர் சாதியினரால் வகுக்கப்பட்ட அதிகாரம் மிகுந்த இரக்கமற்ற அமைப்புமுறையும் அத்தகைய எண்ணங்களையே நிறுவின. அங்கே நேர்முகமாய் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் செயல்கள் அதிக பிரிவினையையும், வெறுப்பையுமே விதைத்தன. வேலை வாய்ப்பில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை மற்றும் பன்முகத்தன்மையை பேணும் நிறுவன ரீதியிலான நடவடிக்கைகளின் மூலமாய், மேற்கத்திய நாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களிலுமே இத்தகைய பாகுபாடு இருப்பதை அறியலாம். ஆனால் இந்தியாவில் இந்த பாகுபாட்டின் ஆழம் மற்ற நாடுகளுடன் ஒப்பீடு கூட செய்ய இயலாத அளவு அதிகம்.
நுழைவுத் தேர்வுகள் அதிலும் இந்தியாவின் மதிப்புமிக்க பல்கலைக் கழகங்களில் கடும் போட்டி நிறைந்தவை. இட ஒதுக்கீட்டு முறை காரணமாய் தலித் மாணவர்களுக்கு தேவையான மதிப்பெண்கள் உயர்சாதியினரை விட சற்றே குறைவு. ஒடுக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு இந்த வகையிலேயே வழங்கப்பட முடியும். இது அவர்களின் பல்வேறு விதமான தடைகளைத் தாண்டி படிக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையை சிறிதேனும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இந்த நிலையிலும், ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் இத்தகைய பல்கலைக் கழகங்களில் மிகவும் குறைவே. பொருளாதார மற்றும் உழைப்பு சுரண்டல், தொடர்ச்சியான அவமானங்கள், மற்றும் பிற சமூகத் தடைகளைத் தாண்டி மிகச் சொற்பமான தலித்துகளே இவ்வளவு தூரம் வர முடிகிறது.
ஆனால், கடினமாய் உழைக்கும், சாதி பற்றிய ஏட்டறிவே கொண்டிருக்கும் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு, இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தின் மீதான தாக்குதல் போன்றே தோற்றமளிக்கிறது. சமத்துவம் வேண்டுமென்றால் எல்லா வரையறைகளும் எல்லாருக்கும் சமமாய் இருக்கவேண்டும் அல்லவா? அடிப்படைவாதிகளின் இந்த வாதம் என்னுள் நன்றாகவே இறங்கியது. அதுவே நியாயமானதாகவும் தர்க்க ரீதியாக சரியானதாகவும் தோன்றியது. இந்த சமத்துவ வாதத்தை தனக்கு பயன்தரும் சூழ்நிலைகளில் மட்டுமே ஆதரிப்பதும், பிறருக்கு பயனளிக்கும் சூழலில் அதை எதிர்ப்பதும், நியாயத்துக்கும் சமநீதிக்கும் குந்தகம் நடக்கும்போது கண்மூடி இருப்பதும் எதைக் குறிக்கிறது?? சமத்துவத்துக்கு எதிரான கள்ள மவுனத்தை அல்லவா காட்டுகிறது?
இத்தகைய அநீதியான சமூகக் கண்ணோட்டம் மற்றும் பலவிதமான சலுகைகளையும் பிறப்புரிமையாய் கொண்டு வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கும் தலித் மாணவர்களுக்கும் இடையே பல்கலைக்கழக வாழ்க்கை ஒரு தெளிவான எல்லையை வகுத்திருந்தது. இந்த போதிக்கப்பட்ட 'சமத்துவமின்மை' குறித்த எண்ணங்களுடன், தலித் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு எளிதான பாதை அமைத்துத் தருகிறது என்ற வாதத்தின் பேரில், அவர்களை தரக்குறைவான வார்த்தைகள் கொண்டு இழிவுபடுத்தியதையும் வருத்தத்துடன் நினைவுகூருகிறேன். வசதி படைத்த தலித் மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை எளிதாய் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் அந்த வாய்ப்பு சமூகத்தின் எந்த அடுக்கில் இல்லை? வசதிபடைத்த அதிகாரம் மிக்கவர்கள் அமைப்பு ரீதியிலான வாய்ப்புகளை தங்களுக்காய் வளைத்துக்கொள்வதை பார்க்கிறோம். ஆனால் அதுவே ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வசதியாய் ஆனவன் பயன்படுத்தினால் நமது நீதியுணர்ச்சியும் அறநெறியும் விழித்துக்கொள்கிறது. அதைத் திசைதிருப்பும் விதமாக நம்மை இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர் போல காட்டிக்கொள்கிறோம்.
தலித்துகளுக்கு எதிரான பகையுணர்ச்சியும் ஒருபக்க சார்புநிலையும் மாணவர்களுடன் நின்றுவிடவில்லை. ஊழியர்கள், பேராசிரியர்கள் என நிர்வாகம் முழுமையும் அதே மனநிலையில் தான் இருந்தது. அதிகாரம் பொருந்திய வழிகாட்டியாய் நிலைநிறுத்திக்கொள்ளும் அவர்கள் தலித்துகளுக்கு எதிரான () இத்தகைய பொய்களைக் கட்டவிழ்த்து விடும்போது, இவர்கள் யதார்த்தத்தில் தலித்துகளின் மீது - பாகுபாடு, அவமதிப்பு, நியாயமற்ற மதிப்பெண்களை போடுதல், துன்புறுத்தல் மற்றும் பல்வேறு மிக கொடூரமான சித்திரவதைகளை நடத்தினர்.
தங்களிடமுள்ள அனைத்தையும் பணயம் வைத்து படித்து, அந்த படிப்பின் வழியாக ஒரு கண்ணியமான வாழ்வில் அடியெடுத்து வைக்க முயற்சிக்கும் இத்தகைய தலித் மாணவர்களின் எதிர்காலம் பெரும்பாலும் கொடூரமாய் முறியடிக்கப்படுகிறது. பலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர் (link). ஊடகங்கள் (அனைத்தும் உயர் சாதியினரால் நடத்தப்படுபவை) இந்த தற்கொலைகள் திறமையின்மை மற்றும் கல்வி, தேர்வு முறை அழுத்தம் காரணமாய் நிகழ்வது போல சித்தரிக்கின்றன. ஆனால் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பெரும்பாலான தற்கொலைகள் அவமானப்படுத்துதலும், சாதி ரீதியான துன்புறுத்தல்களுமே காரணம் என்பதை தெளிவாய் அறிய முடிகிறது. இத்தகைய நிலை "தகுதியின் மரணம்" என்றே அழைக்கப்படுகிறது. மிகத் திறமையான மாணவர்கள், சமூக இழிவை உடைத்து வெளியேறத் துடிப்பவர்கள், மொத்த அமைப்பும் தரும் அவமானத்தையும், துன்பத்தையும், சுரண்டலையும் அநீதியையும் தங்கவியலாமல் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தன்மயி:
இவற்றை எல்லாம் புரிந்துகொண்ட பின்னர், தன்மயி சொன்ன "தற்கொலை செய்திருப்பேன்" என்பதன் முழு அர்த்தமும் புரிந்தது. இத்தகைய பெரும் துயரங்களின் மீது பயணித்து இப்போது சியாட்டலில் ஒரு கொண்டாடப்படும் கணிப்பொறியாளனாய் இருப்பது மிகவும் ஆச்சரியமானது, அரிதானதும் கூட. அதற்கு முக்கிய காரணம் தன தாயார் என்று கூறுவான். அவர் தன்னையும் தன் குழந்தைகளுக்கும் கற்பிப்பதில் மிக உறுதியாய் இருந்தார். அவன் அந்த துணிச்சலை அவரிடமிருந்தே பெற்றிருந்தான். மேலும் அவன் அசாதாரணமான திறமையுள்ள மாணவனாய் இருந்தான். இட ஒதுக்கீட்டு முறை அவனுக்கு நன்றாய் படித்து மிகச்சிறந்த மாணவனாய் இருந்தால் நல்ல கல்விநிறுவனத்தில் படிக்க முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது.
இந்த மீப்பெரு வெற்றியுடன் அவனது துயரங்கள் முடிவுக்கு வந்துவிடவில்லை.இளங்கலை முடித்து பட்ட மேற்படிப்புகளை படிக்கும்போதும் அவன் எதிர்கொண்ட பாரபட்சங்கள் பாரதூரமானது. உதவும் மனப்பான்மை கொண்ட ஒருவர் மூலமாய் அவனால் மேற்படிப்பு படிக்க முடிந்தது. தனது உள்ளார்ந்த உறுதியின் காரணமாய் மிகப்பெரும் தொடர்ச்சியான அவமதிப்புகளையும் துன்பங்களையும் தாங்கிநிற்க முடிந்தது.
இறுதியாய் அவன் ஒரு சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனத்தின் பணியில் அமர்ந்து, அமெரிக்கா வந்தடைந்தான். பெரும்பாலானோருக்கு இத்தகைய வேலை, பணக்காரனாக ஒரு வாய்ப்பாய் அமையும். ஆனால் அவனுக்கு தன்மீது பூட்டப்பட்ட விலங்குளில் இருந்து விடுதலை பெற ஒரே வழியாய் இருந்து இருந்தது.
முடிவுரை:
நானும் இப்போதிருக்கும் இடத்தை அடைய கடின உழைப்பை செலுத்தினேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் எனது வாழ்வு பல சிறப்புரிமைகளை தன்னகத்தே கொண்டிருந்தது. பலர் எவ்வாறு அடிப்படை வசதிகள் கூட பறிக்கப்பட்ட நிலையில் துன்புறுகிறார்கள் என்பதை தன்மயியுடனான நட்பு எனக்கு உணர்த்துகிறது. பல உயர் வருணத்தவர் கூட பல்வேறு தடைகளை தாண்டி வெற்றி பெறுகின்றனர். ஆனால் தலித்துகளுக்கு தங்கள் மேல் செலுத்தப்படும் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளவே அவர்களைப் போன்ற பல மடங்கு வலிமை தேவைப்படுகிறது.
நான் குடிபுகுந்த நாட்டில் இந்த ஒப்புமை மிகத் தெளிவாய் உள்ளது, அதிலும் நிறவெறி மிக வெளிப்படையாய் இருக்கும் இந்தக் காலத்தில். இந்தியாவிலிருக்கும் சாதிப் பாகுபாடு என்பது மேற்குலகில் இருக்கும் நிறவெறிக்கு ஒப்பானது. ஆணாதிக்கம், பாலின தேர்வு, மற்றும் வேறு பல பாரபட்சங்களைத் தவிர்த்துப் பார்த்தாலும் அது நிற வெறி போன்றே மிகக் கொடுமையானது. என்னைப்பற்றி நான் அறிந்துகொள்ளவும், எனக்கு சாதி மூலமாய்க் கிடைத்த சிறப்புரிமைகளை அறிந்துகொள்ளவும் இங்கிருக்கும் வெள்ளையின சிறப்புரிமை பற்றிய புரிதல் எனக்கு உதவியது.
கடைசியில், தலித் வாழ்வில் இருக்கும் சிரமங்கள் யதார்த்தமானதும் நேரடியாய் உணரக்கூடியதும் ஆகும். அவமானப்படுத்தப்படுதல் தினப்படி மிகவும் சாதாரணம். நம்மில் பெரும்பபான்மை அவற்றை அறியாமல் இருக்கிறோம் அல்லது அதைப்பற்றிய சுரணை இல்லாதிருக்கிறோம். இதுபற்றிய மேம்போக்கான தேடுதல் கூட தலித்துகளை நிலை எவ்வளவு மோசமானதாய் இருக்கிறது என்பதற்கான தரவுகளையும் ஆவணங்களையும் குவிக்கிறது. இந்த இடத்தில் அறியாமை ஒரு சிறப்புரிமையாகவே செயல்படுகிறது.
தன்மயி என்னைப்பற்றியும் எனக்குத் தெரிந்ததாய் நான் நினைத்துக்கொண்டிருந்த சமூகத்தைப் பற்றியும் எனக்குக் கற்றுக்கொடுத்தான். நாங்களிருவரும் ஒரு நல்ல புரிதலுக்கு வந்திருக்கிறோம். எனது வாழ்வின் வளரிளம் பருவத்திலேயே ஒரு தன்மயியை கண்டறிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எங்களுடைய இந்த கதை மேலும் பல ப்ரஷாந்துகளையும் தன்மயிகளையும் இணைக்க உதவும் என்று நம்புகிறேன். காதுகொடுத்து கேட்பதன் மூலமாகவும் உள்ளார்ந்த அனுபவத்தின் வழியாய் அனுதாபத்தின் வழியாயும் சாதி ஒடுக்குமுறையை கடந்தகாலமாய் ஆக்க முற்படுவோம். காதுகொடுத்துக் கேட்பது அங்கீகாரத்துக்கு வழிவகுக்கும், அது பின்னர் கூட்டாய் சேர்ந்து பணியாற்றவும், பின்னர் ஒரு தீர்வுக்கும் வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை.
Source: https://countercurrents.org/2017/10/04/upper-caste-privilege-from-catharsis-to-change/