Monday, December 11, 2017

தரப்படாத முத்தங்களும்
பெறப்படாத முத்தங்களும் அதிகம் உண்டு என்னிடம்.
அவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
அவை கடலளவு ஆகலாம்.
கடல் தாண்டியும் அவற்றை தேடிச் செல்லலாம்.
அது ஏன் வேறெதையும் அல்லாது
சிறு அணைப்புகளையும் முத்தங்களையுமே மனம் தேடுகிறது?
இந்த மனதுக்கு வேறு வேலையே இல்லை.
விழித்திருக்கும்போதெல்லாம் முத்தங்கள்
அடியாழத்தில் நீந்திக்கொண்டே இருக்கின்றன.
அவை மேலேயும் வருகின்றன, யாரும் பார்க்கும் முன்
ஒரு சிறு குமிழி காற்றை விழுங்கிவிட்டு
அவை மீண்டும் அடியாழத்திற்கே செல்கின்றன.
அங்கே நீந்த இடம் உண்டு
அங்கிருக்கும் தண்ணீர் உறைவதில்லை
அங்கு புலப்படும் அசைவுகள்
மேலே உணரப்படுவதில்லை.
அதுவே நல்லது.
சில முத்தங்களின் ஈரம் உதடுகளிலேயே நின்று விடுகிறது.
ஆண்டுகளாய் காத்திருந்து பெறும் முத்தம் உயிர்ப்பிழக்கையில்
மிஞ்சுவது துயரம் மட்டுமே.
என்னை விழுங்க வரும் அதன்
எட்டு கரங்களையும்
வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.

Sunday, December 10, 2017

தடயங்கள்


தடயங்கள் முக்கியமானவை
அவையே வரலாற்றின் சாட்சியங்கள்
அவையே வரலாற்றை உருவாக்குகின்றன
புத்தகங்களில் குடியேறுகின்றன 
சுற்றியுள்ளோரின் மனங்களில் 
நாம் விரும்பியதை நிறுவுகின்றன.

மருத்துவமனையிலிருக்கும் அப்பாவை பார்க்க 
நான் போவது முக்கியமில்லை,
ஆனால் உனக்கு முன் நான் போய்விட வேண்டும்.
நான் என்னவாய் இருக்கிறேன் என்பதைவிடவும் 
என்னவாய் தெரிகிறேன் என்பது முக்கியம்.
இருப்பை விடவும் இருப்பின் தடயங்கள் முக்கியம்.
பின்னொரு நாளில் அந்த தடயங்களனைத்தும் 
ஒன்று சேர்ந்து துரத்தும்போது என்ன செய்யப்போகிறாய்?

முடிவுசெய்யப்பட்டவை


வாழ்க்கைக்கான கால அட்டவணை போடப்படுகிறது 
அதில் பலருக்கும் ஆர்வமுள்ளது
நீங்கள் ஏன் எனக்கான அட்டவணையை தயாரிக்கிறீர்கள் 
என்று மனம் ஓலமிட்டுக் கூப்பாடு போடுகிறது
அக்கறையாய் அலங்கரிக்கப்படுவதில் இருக்கும் சிக்கல்கள்.
 புன்னகைக்க வேண்டும்
புண்படுத்தாத காரணங்களை 
கடந்த ஒருவாரமாய் மனம் அசைபோடுகிறது
வரிசைப்பட்டியல் கூட தயார் நிலையில்
போர்க்கால ஏவுகணைக்கு சற்றும் குறைந்ததல்ல இது
சமயம் சிறிது தப்பினாலும் பிசகிவிடும்.

எனது முத்தங்களை அப்படியே விழுங்கிவிடுகிறேன்
ஏனென்றால் அவற்றுக்கான முடிவுகள் வெளிப்படுகையில் 
என் உதடுகளில் 
இரண்டொரு ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்கலாம்

Friday, May 12, 2017

பசித்த வயிறுகள் துரத்தும் வீடுகள்


நண்பர்கள் சூழ்ந்த இடத்தில் 
எனக்குப் பசிக்கிறதென்று சொல்வது போல 
என்னுடையதாய் வரிக்கப்பட்ட 
என் சுதந்திர வெளிகளில் 
சொல்ல முடிவதில்லை.
அதிலென்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது?
ஒன்றுமில்லை தான். ஆனால்..
ஒன்றுமில்லை.

உனக்குப் பசிக்கிறதா என்கிற கேள்விக்கு 
“ஆம்” என்ற பதில் எப்போதுமே 
தர முடிந்ததில்லை.
“உனக்கு?” என்கிற எதிர்க்கேள்வியை தவிர.
கடைசியாய் அந்தக்கேள்வியைக் கேட்டவளொருத்தி 
தன் கணவனைப் பிரிந்துவிட்டிருந்தாள்,
முற்றிலுமல்ல
இந்த இடத்தில் நீங்கள் 
சிறியதொரு புன்னகையை உதிர்க்க வேண்டும்.
அவமானங்களைச் சந்திக்க 
துணை தேடுவதைப் போலவே 
எனக்கும் பசிக்கிறதென்று 
சத்தமாய்ச் சொல்ல உடன் ஒருவர் 
இருக்கத்தான் வேண்டும்.

நாட்கள் செல்லச்செல்ல  
எனக்குப் பசிக்கிறதென்று 
கூக்குரல்கள் துரத்தும்.
தினமும் சிலமணி நேரங்களை உண்டு 
அக்குரல்கள் ஆற்றுப்படும்.
சில ஒப்பந்தங்கள் பசிக்கும் வயிறுகளை 
தலைமேல் ஏற்றிவிடுகின்றன.
வேண்டாமென்று ஒதுங்கவோ,
நானேற்ற ஒப்பந்தம் இது இல்லையென்றோ 
தப்பிக்கவியலாது.
அதற்கு சில முன்னேற்பாடுகள் தேவைப்படுகிறது.
உள்ளிருந்து பிராண்டும் கரங்களை 
அவ்வப்போது வெட்டிவிட வேண்டும்.
உணவு தயாரிக்கையில் யாரிடமும் எதுவும் 
பேசிவிடவோ கேட்டுவிடவோ கூடாது.
அது உணவின் சுவையை பாதிக்கும்.

தேவையற்ற சமயங்களில், முக்கியமாக 
விழாக்காலங்களில் ஆண்களுக்கு முன்னதாகவோ
அல்லது விரதமிருக்க வேண்டிய காலங்களில் 
பசித்துவிட்டாலோ இன்முகம் மாறாமல் 
காத்திருக்க நேரும்.
குடும்பத்தை காக்கும் தூணானவள் 
நோன்பிருந்து வழிபடுவதே நல்லது.

இப்போதெல்லாம் என் பசியை 
நானே வடிவமைக்குமளவு தேர்ந்துவிட்டேன்.
ஆம், என்னுடைய தட்டில் 
சோற்றைப்பார்த்த பின்னர் தான் 
பசிக்கத்துவங்குகிறது.
இருப்பினும்,
சமைத்தவுடன் பசி நீங்கி விடுகிறது.

அதுபோலத்தான், ஆடிக்களைத்து 
உன்மீது வரிக்கப்பட்ட வீட்டை அடையும்போது 
பசித்த வயிறுகள் காத்திருக்கலாம்.
பசித்த வயிறுகள் துரத்தும் வீடுகள் 
ஒருபோதும் உனக்கு 
அடைக்கலமாயிருக்க முடியாது.
அப்போதெல்லாம் ஏதாவதொரு காரணம் சொல்லி 
விரைவாய் உண்டு முடித்து 
இருளில் பொதிந்துவிடு.
ருசித்துண்ணுவதற்கான நேரம் இதுவல்ல.

Monday, May 8, 2017

தீர்மானிப்பவர்கள்

நீங்கள் எதற்காக சந்தோஷப்பட வேண்டுமென்று 
அவர்களே தீர்மானிக்கிறார்கள்..
எதற்காக துக்கப்படவேண்டும் என்றும் 
அவர்களே தீர்மானிக்கிறார்கள்..
எனக்கு துக்கமே வருவதில்லை என்கிறேன்.
நம்ப மறுக்கிறார்கள்.
அதற்காக இங்கெல்லாம் சிரித்து வைத்துவிடாதே 
என்று தரையை நோக்கியபடி சொல்கிறார்கள்.
முகம் தட்டையாகிவிட்டது..

என்னுடலில் நான் இடும் சில புள்ளிகள் 
அவசியமற்றவை..
நண்பனின் திருமணம் அவசியமற்றது.
மழை வரப்போகிறதல்லவா?
அது நின்றுவிடப்போகிறதா என்ன?
நெருங்கிய நண்பனா?
இல்லையில்லை, ஒருகாலத்தில் நண்பனாயிருந்தவன்.
அவ்வளவுதான்.

கூந்தலின் நீளம்
எவ்வளவு வேண்டுமென்று 
கத்திரிக்கோலுடன் கேட்கிறாள் 
அந்த அழகுநிலையத்துக்காரி.
உன் கூந்தல்  மென்மையாய் இருக்கிறது என்கிறாள்.
அதன் ஒரு கற்றையில் செம்பு நிறமடித்தால் 
எப்படியிருக்கும் என்று கேட்கிறேன்.
அவள் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு 
செம்பில் எத்தனை வண்ணங்கள் என்று 
எடுத்துக் காட்டுகிறாள்.
நான் ஊருக்கு போகவேண்டும்,
நேரமில்லை, விரைவாய் வெட்டு என்கிறேன்...
மீண்டும் கேட்கிறாள்,
எவ்வளவு நீளம்.. 
தீர்மானிக்கப்பட்ட அளவுகளுக்குள் ஏதோ ஒன்று  
அவளையே தேர்ந்தெடுக்குமாறு சொல்லிவிட்டு 
கண்களை மூடி அமர்கிறேன்.
எண்ணெயிட்டு அதன் நிறத்தை 
இன்னும் கறுப்பாக்க வேண்டும்.

புன்னகையின் அகலம்
கூடுகிறதா குறைகிறதா?
புன்னகையுடன் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு 
புன்னகையுடன் பதிலிறுக்க வேண்டும்.
ஆனால், பதிலின் புன்னகை 
கேள்வியின் புன்னகையை விட 
நீண்டோ குறைந்தோ இருந்துவிடலாகாது.
உலக அழகிகளின் புன்னகைகள் 
அப்படித்தான் இருக்குமென்கிறார்கள்.
கூடக்குறைய இல்லாமல், அளவாக.
அவர்கள் அதற்கு பயிற்சியளிக்கப்படுகிறார்களாம்.
எனக்கு சிரிப்பு வருகிறது.

நீங்கள் எதற்காக மரணித்துப்போக வேண்டுமென்றும் 
அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.
அத்தகையதோர் மரணம் வேண்டுமென்றே 
நானும் விரும்புகிறேன், ஓரிரு மாற்றங்களுடன்.
அத்தகைய மரணம் முத்தங்களால் மட்டுமே சாத்தியம் 
என்று ஒரு முட்டாளைப்போல எண்ணுகிறேன்.
கேளாத இசையைப்போலவே, அம் மரணமும் தோன்றுகிறது.
எனக்காய் ஏதேனும் தீர்மானங்கள் 
செய்துகொள்ள விழைகிறேன், சிறிய அளவிலானவை தான்.
என் மரணம் எப்படியிருக்க வேண்டும் என்பது போல.
ஆனால் ஏற்கனவே செய்யப்பட தீர்மானங்கள் 
எக்காளமிடுகின்றன.
தப்பிச்செல்வதற்கான தீர்மானங்கள் தவிர 
வேறெதுவும் இருக்கிறதா? - இருக்கக்கூடும், இருக்கவேண்டும்.
ஆத்மாநாமை தேடிக்கொண்டிருக்கிறேன்.

Friday, April 14, 2017

கடந்து போன நண்பனின் திருமணம்

சில நேரங்களில் நண்பர்களின் திருமணத்துக்கு
போகமுடியாமல் போய்விடுகிறது.
அதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரணங்கள்
எப்படியும் கிடைத்துவிடுகின்றன.
அதிலொன்று அவனிடம் சொல்வதற்கானது.
மனதுக்குள் அந்த உரையாடலை
பலமுறை நிகழ்த்திவிடுகிறேன்.
அதற்கான அவனது பதில் கேள்விகளுக்கும்
கோபங்களுக்கும் சமாதானமான
வார்த்தைகளை கோர்த்து வைப்பதில்
இடைப்பட்ட நாட்கள் கனமாய்
இடுப்பில் ஏறி உட்கார்ந்துகொள்கிறது.
அதைச்சுமந்து கைகள் மரத்துப்போகின்றன.
மூளையும் தான்.

உணவில் காரம் கூடிவிடுகிறது.
அதை சமன்படுத்த உப்பு சேர்த்தாகிவிட்டது.
அவன் கேட்கக்கூடிய நூறு கேள்விகளுக்கான பதிலையும்
தயார் செய்துவிட்டேன்.
நேரில் பார்த்து பேசுவதை விட
தொலைபேசியில் இதுபற்றி பேசுவது சவுகரியமானது.
அவன் புது மனைவி எப்படியிருப்பாள்?
எப்போதும் மனைவிகள்தான் புது மனைவிகளாய் இருக்கிறார்கள்.
கணவர்கள் என்றும் புதுக்கணவர்கள் என்று அழைக்கப்படுவதில்லை.
அவளுக்கும் சில பதில்களை தயார் செய்துகொள்கிறேன்.
நாளை அழைக்க வேண்டும்.
மதியம் அழைத்தால் சற்று நேரம் பேசலாம்.
மழை வருவதற்கு வாய்ப்பில்லை.
கூடுதலாய் சில நிமிடங்கள் கிடைக்கலாம்.

தயார் செய்த பதில்களை அசைபோட்டுக்கொண்டே
வேலைகளை விரைவாய் முடித்தாயிற்று.
என்னவொரு அதிசயம், கைகள் மரத்துப்போகவில்லை.
அவன் எண்ணை அவன் பெயரில் தேடுகிறேன்.
அப்படியொரு பெயரே இல்லை என்கிறது என் கைப்பேசி.
அப்போது தான் உரைக்கிறது, அவன் எண்ணை
அவனுடைய நிஜப்பெயரில் சேமித்து வைத்தது.
சமீபத்தில் தான்.
அப்பெயரின் பயன்பாடு
நினைவில் கொள்ளும்படியாய் இல்லை.
மணி அடிக்கிறது.
எடுக்கிறான்.
"நான் ____ பேசுகிறேன்"..
"தெரியும், சொல்லு.. ".
உரையாடல் நினைவில் இல்லை.
இணைப்பை துண்டிக்கிறேன்.
என் நூறு பதில்களில் ஒன்றுக்கான
கேள்வியைக்கூட அவன் கேட்கவில்லை.
வெளியே கால் பற்றுமளவுக்கு
வெயிலடிக்கிறது.

Sunday, April 9, 2017

வெள்ளைக்காரனிடம் வாங்கி தின்னும் ஆண்டையரும் தமிழ் கலாச்சார கட்டுக்கோப்பும்

தமிழர் மரபில் சாதி இல்லையென்று நாம் கூவிக்கொண்டு திரிந்தாலும்நாடு விட்டு நாடு சென்று டாலரில் சம்பாதித்து சங்கம் வைத்துத் தமிழை வளர்க்கிறோம் என்று சூட் போட்டு மைக் பிடித்து பேசினாலும், நமக்குள் ஊறி வேர்விட்டு இருப்பதென்னவோ சாதி தான்நாமெல்லாம் சமத்துவம் பேணுபவர்கள் தான்.. நம் சாதி கேள்விக்கு உள்ளாகாத வரை

சரிவிஷயத்துக்கு வருவோம்அமெரிக்காவில் ஒரு சங்கம்தமிழை வளர்ப்பதாய் ஒரு திருவிழா வருடந்தோறும் வெவ்வேறு ஊர்களில் டென்ட் போட்டு வரலாற்றை நிலைநாட்டுபவர்கள்ஒரு எழுத்தாளரை அழைக்க முடிவு செய்து அவரை அழைக்கவும் செய்கிறார்கள்அப்புறம் தான் தெரிகிறது அவர் தன் சாதி அதிகார வர்க்கம் செய்தசெய்கிற அக்கிரமங்களை எழுதியதால் அவர்களால் பெரும் மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்டவர். கலவரம் செய்ய காரணம் வேண்டுமல்லவாஅவர் எழுதிய நாவலே அதற்கு கை கொடுத்ததுஅதாவதுமுதல் பதிப்பு விற்று தீர்ந்து அடுத்தடுத்த பதிப்புகள் வந்துகொண்டிருக்கும் வேளையில்எழுதி நாலு வருடம் கழித்து அது சிலரின் மனதை தேர்ந்தெடுத்து புண்படுத்துகிறதுஅப்புறம் புண்பட்டவர்களெல்லாம் ஏதோ ஒரு வகையில் பள்ளிக்கூடம் போன்ற சிறுதொழில் செய்து மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் அதற்கு இந்து மத அமைப்புகள் உதவி செய்ய முன்வந்தனஅதெப்படியோஇவர்களெல்லாம் ஒரு சாதியை சேர்ந்தவர்களாகவே இருந்தது ஒரு இயல்பு நவிற்சி அணியாகவே இருக்கிறதென்று நம்புவோம்

சரிமுன்னுரை முடிந்ததுஒரு எழுத்தாளனை அழைத்து சமரசம் என்கிற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு வெளியேற்றி அவனுள் இருந்த எழுத்தாளனை அவமதித்து கொலை செய்தது அந்த தூய சாதி கூட்டம்இந்த தூய சாதிக்கு வெள்ளைத் தோல் எங்கிருந்து வந்தது என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்அது கடவுளே நேரில் வந்து அருளியதாய் இருக்கலாம்கள்ளை கூட சொந்த சம்பாத்தியத்தில் வாங்க வக்கற்று காட்டை விற்று குடிக்கும் பரம்பரையல்லவாகடவுளே மிரண்டு தான் போயிருப்பார்ஆனாலும் என்ன தான் முக்கினாலும் நீயொரு  முதல் நிலை சூத்திரன் என்று நூல் போட்டவன் சொல்லுவான். சூத்திரனென்றால்? தமிழில் எழுதினால் அச்சிலேற்ற முடியாது. அதுனால டீசண்டா சமஸ்கிருதத்தையே பயன்படுத்துவோம். அதனாலென்னசூத்திரர்களில் முதல் நிலை அல்லவாபெருமை தான்

வெள்ளைக்காரன் வேலையல்லவாநாம் சுரண்டியது மாதிரி இல்லாமல் அவன் சரியான சம்பளம் கொடுத்தான்காசு இருந்தால் கூடவே சாதி புத்தி எட்டிப்பார்க்கும் அல்லவாகுடும்ப பெயர் என்கிற போர்வையில் சாதி பெயர் வைத்துக்கொள்வதுகுடும்ப விழா என்கிற பெயரில் சாதிகாரங்களை ஒன்றாய் கூட்டி குழந்தைகள் மனதில் சாதி விஷத்தை விதைப்பது என்றெல்லாம் நல்ல விஷயங்கள் நடந்தேறுகின்றன.

சரிஅந்த எழுத்தாளனுக்கும் இதற்கும் என்ன தொடர்புஅவர் தமிழ் எழுத்தாளர் அல்லவாநாம் செய்யும் தமிழ் வளர்ப்பு விழாவுக்கு அழைத்தால் அஃதொரு பெருமையல்லவாஅழைக்கலாம்எழுத்தாளனை ஏமாற்றுவதா கஷ்டம்எல்லாம் சொன்ன பிறகு தான் தெரிய வருகிறதுஅவன் தாக்கப்பட்டது நம்ம ஆண்ட சாதி தூய்மையை முன்னிட்டு என்று.. என்ன செய்யஎன்ன செய்ய முடியாதுவெள்ளைக்காரன் காசு இருக்குதில்லையாஅவனை தூக்கிட்டு அவனுக்கு பதிலா நம்ம சாதி சமீன்தாரை கூட்டிட்டு வாஅதிலும் நாலு முற்போக்கு ஆட்களை சேர்த்து போட்டு கூட்டிட்டு வந்தா யாருக்கு தெரிய போகுது? ஒய்யார கொண்டைக்கு உள்ள இருக்கும் ஈறும் பேனும் ஒருநாளைக்கு வருபவர்களுக்கு தெரியவா போகிறது? வெள்ளைக்காரன் காரி துப்பினா இதை காட்டினா போவுது. ஆனா, ஏற்கனவே கூப்பிட்ட எழுத்தாளனை என்ன செய்வதுஅவன் மண்டைக்குள் புகுந்து மறக்கடிக்கவா முடியும்அலைக்கழித்தது வேறு ஏதோ ஒரு சாதியாய் இருந்திருந்தால், அதையும் பெரிதாய் போட்டு முற்போக்கு மேளம் கொட்டி இருக்கலாம். நம்ம சாதிய விட்டுக்கொடுக்க முடியுமா?  விசா கிடைக்கலன்னு ஒரு பிட்ட ஓட்டினா முடிஞ்சுது.


ஏற்கனவே சாதியால் மரணித்த எழுத்தாளனை தோண்டி எடுத்து அவமதித்து மீண்டும் கொலை செய்கிறது சாதிஅதை துணிவுடன் சாதியின் பெயரால் செய்யலாமேவெள்ளைக்காரன் கொடுத்த சமத்துவத்தில் வளர்ந்துசம்பாதித்து தன் குழந்தைகளுக்கு சாதி போதிக்கும்சாதி பாகுபாடு பேணும் இழிவைதமிழின் பெயரால் செய்வது தான் பெற்ற பிள்ளைக்கு வேறொரு தகப்பன் பெயர் தருவதை போன்றதுசாதி என்றென்றைக்குமாய் கால்களுக்கு நடுவில் ஒளிந்துகொண்டிருக்கிறதுஅங்கே அடித்தால் தான் வலிக்குமென்றால்அதையும் செய்வோம்

Sunday, March 26, 2017

என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள்


என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
அது எந்த வகையிலானானும் சரி.
உங்கள் ஆளுமைத்திறனின் ஏவலாளாக இருப்பதில்
எனக்கு ஆட்சேபணைகள் எதுவுமில்லை.
உங்கள் தேவைகளை ஓடோடி நிறைவு செய்வதில்
என்ன நேர்ந்துவிடப்போகிறது?

படித்துக்கொண்டிருக்கும் வாக்கியத்தை முடிக்காமலே
புத்தகத்தை அடையாளமிட்டு மூடி வைத்து
கையொப்புவிக்கப்பட்ட குப்பைகளை சற்று தொலைவிலிருக்கும்
தொட்டியில் போட எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது?
அந்த பானையிலிருந்து ஒரு சொம்பு தண்ணீர்
மொண்டுவர எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது?
ஆம்.. எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது?

ஒருவேளை எனக்கு குப்பைகளை தொட்டியில் போடவும்
தூரத்திலிருக்கும் ரிமோட்டை எடுத்துவந்து தரவும்
இடைவேளை தேநீர் இடவும்
கைப்பேசியை இணைப்பில் இட்டு வைக்கவும்
காய்ந்த துணிகளை எடுத்து வரவும்
மட்டுமே பிடித்திருக்கிறதோ?
ஆம். அதுதான் உண்மை.
அதுமட்டுமே எனக்கு பிடித்திருக்க வேண்டும்..

இவ்வளவு சிறிய அளவிலேனும் பயன்படாத
வாழ்வும் ஒப்பந்தங்களும் எதற்கானது?
இவ்வளவேனும் பயனளிக்க கருவியாவதில்
எனக்கு வருத்தம் ஏதுமில்லை..
சொல்லப்போனால் அதுகுறித்து மகிழ்ச்சியே.
ஆனால் அதை அன்பேன்றோ காதலென்றோ
என்னிடத்தில் சொல்லிவிடாதீர்கள்.

Friday, March 17, 2017

கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே..

"கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே.." 
என்று துவங்கும் கேள்விகளில் கவனமாய் இருங்கள்.
அதைக் கேட்பவர்கள் உங்களுக்கு மிகவும் வேண்டியவராய் இருக்கலாம்.
உங்கள் உறவினராகவோ நண்பராகவோ இருக்கலாம்.
உங்களுக்கு அம்மாவை போன்றோரோ அப்பாவைப்போன்றோரோ இருக்கலாம்..
அவர்கள் உங்கள் மேல் அன்புகொண்டோர் யாரேனும் போல இருக்கலாம்.
அவர்கள் உங்கள் மேல் அதிகாரம்கொண்டோர் யாரேனும் போல இருக்கலாம்.
முன்னாள் காதலன் போலவும் இருக்கலாம்.
யாரேனும் போல இருப்பதையே அவர்களும் விரும்புகிறார்கள்.

"கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே.." 
என்று துவங்கும் கேள்விகளில் கவனமாய் இருங்கள்.
அதன் பொருள் "நீ நேரடியாய் பதில் சொன்னால் 
என் மனம் நோகும்அந்தக் குற்றத்தைச் செய்யத் துணியாதேஎன்பதாகும்
அக்கேள்விகளுக்கு நேர்மையான பதிலைச் சொல்லத் தயங்காதீர்கள்
ஏனென்றால்உண்மையைப் போன்றதொரு கூராயுதம் வேறில்லை.
அது தரும் நிம்மதிக்கு நிகரில்லை..