Sunday, March 26, 2017

என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள்


என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
அது எந்த வகையிலானானும் சரி.
உங்கள் ஆளுமைத்திறனின் ஏவலாளாக இருப்பதில்
எனக்கு ஆட்சேபணைகள் எதுவுமில்லை.
உங்கள் தேவைகளை ஓடோடி நிறைவு செய்வதில்
என்ன நேர்ந்துவிடப்போகிறது?

படித்துக்கொண்டிருக்கும் வாக்கியத்தை முடிக்காமலே
புத்தகத்தை அடையாளமிட்டு மூடி வைத்து
கையொப்புவிக்கப்பட்ட குப்பைகளை சற்று தொலைவிலிருக்கும்
தொட்டியில் போட எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது?
அந்த பானையிலிருந்து ஒரு சொம்பு தண்ணீர்
மொண்டுவர எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது?
ஆம்.. எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது?

ஒருவேளை எனக்கு குப்பைகளை தொட்டியில் போடவும்
தூரத்திலிருக்கும் ரிமோட்டை எடுத்துவந்து தரவும்
இடைவேளை தேநீர் இடவும்
கைப்பேசியை இணைப்பில் இட்டு வைக்கவும்
காய்ந்த துணிகளை எடுத்து வரவும்
மட்டுமே பிடித்திருக்கிறதோ?
ஆம். அதுதான் உண்மை.
அதுமட்டுமே எனக்கு பிடித்திருக்க வேண்டும்..

இவ்வளவு சிறிய அளவிலேனும் பயன்படாத
வாழ்வும் ஒப்பந்தங்களும் எதற்கானது?
இவ்வளவேனும் பயனளிக்க கருவியாவதில்
எனக்கு வருத்தம் ஏதுமில்லை..
சொல்லப்போனால் அதுகுறித்து மகிழ்ச்சியே.
ஆனால் அதை அன்பேன்றோ காதலென்றோ
என்னிடத்தில் சொல்லிவிடாதீர்கள்.

No comments:

Post a Comment