Monday, May 8, 2017

தீர்மானிப்பவர்கள்

நீங்கள் எதற்காக சந்தோஷப்பட வேண்டுமென்று 
அவர்களே தீர்மானிக்கிறார்கள்..
எதற்காக துக்கப்படவேண்டும் என்றும் 
அவர்களே தீர்மானிக்கிறார்கள்..
எனக்கு துக்கமே வருவதில்லை என்கிறேன்.
நம்ப மறுக்கிறார்கள்.
அதற்காக இங்கெல்லாம் சிரித்து வைத்துவிடாதே 
என்று தரையை நோக்கியபடி சொல்கிறார்கள்.
முகம் தட்டையாகிவிட்டது..

என்னுடலில் நான் இடும் சில புள்ளிகள் 
அவசியமற்றவை..
நண்பனின் திருமணம் அவசியமற்றது.
மழை வரப்போகிறதல்லவா?
அது நின்றுவிடப்போகிறதா என்ன?
நெருங்கிய நண்பனா?
இல்லையில்லை, ஒருகாலத்தில் நண்பனாயிருந்தவன்.
அவ்வளவுதான்.

கூந்தலின் நீளம்
எவ்வளவு வேண்டுமென்று 
கத்திரிக்கோலுடன் கேட்கிறாள் 
அந்த அழகுநிலையத்துக்காரி.
உன் கூந்தல்  மென்மையாய் இருக்கிறது என்கிறாள்.
அதன் ஒரு கற்றையில் செம்பு நிறமடித்தால் 
எப்படியிருக்கும் என்று கேட்கிறேன்.
அவள் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு 
செம்பில் எத்தனை வண்ணங்கள் என்று 
எடுத்துக் காட்டுகிறாள்.
நான் ஊருக்கு போகவேண்டும்,
நேரமில்லை, விரைவாய் வெட்டு என்கிறேன்...
மீண்டும் கேட்கிறாள்,
எவ்வளவு நீளம்.. 
தீர்மானிக்கப்பட்ட அளவுகளுக்குள் ஏதோ ஒன்று  
அவளையே தேர்ந்தெடுக்குமாறு சொல்லிவிட்டு 
கண்களை மூடி அமர்கிறேன்.
எண்ணெயிட்டு அதன் நிறத்தை 
இன்னும் கறுப்பாக்க வேண்டும்.

புன்னகையின் அகலம்
கூடுகிறதா குறைகிறதா?
புன்னகையுடன் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு 
புன்னகையுடன் பதிலிறுக்க வேண்டும்.
ஆனால், பதிலின் புன்னகை 
கேள்வியின் புன்னகையை விட 
நீண்டோ குறைந்தோ இருந்துவிடலாகாது.
உலக அழகிகளின் புன்னகைகள் 
அப்படித்தான் இருக்குமென்கிறார்கள்.
கூடக்குறைய இல்லாமல், அளவாக.
அவர்கள் அதற்கு பயிற்சியளிக்கப்படுகிறார்களாம்.
எனக்கு சிரிப்பு வருகிறது.

நீங்கள் எதற்காக மரணித்துப்போக வேண்டுமென்றும் 
அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.
அத்தகையதோர் மரணம் வேண்டுமென்றே 
நானும் விரும்புகிறேன், ஓரிரு மாற்றங்களுடன்.
அத்தகைய மரணம் முத்தங்களால் மட்டுமே சாத்தியம் 
என்று ஒரு முட்டாளைப்போல எண்ணுகிறேன்.
கேளாத இசையைப்போலவே, அம் மரணமும் தோன்றுகிறது.
எனக்காய் ஏதேனும் தீர்மானங்கள் 
செய்துகொள்ள விழைகிறேன், சிறிய அளவிலானவை தான்.
என் மரணம் எப்படியிருக்க வேண்டும் என்பது போல.
ஆனால் ஏற்கனவே செய்யப்பட தீர்மானங்கள் 
எக்காளமிடுகின்றன.
தப்பிச்செல்வதற்கான தீர்மானங்கள் தவிர 
வேறெதுவும் இருக்கிறதா? - இருக்கக்கூடும், இருக்கவேண்டும்.
ஆத்மாநாமை தேடிக்கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment