Friday, January 12, 2018

விரைந்து செயலாற்றுங்கள்

உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும்
அவர்களுக்குத் தோன்றும் வரை
நீங்கள்
சோற்றாலடித்த பிண்டங்களாய் இருக்க வேண்டும்.
சோறாக்கும் பிண்டங்களாயும்
இருக்க அனுமதி உண்டு.
அந்த கால இடைவெளியில்
உங்கள் எண்ணங்கள் மாறலாம்
ஆசைகளின் அர்த்தங்கள் காலாவதியாகிப் போகலாம்.
நீங்களே கூட காலாவதியாகிப் போகலாம்.
அவர்களின் எல்லைக்கோடுகள் மாறும்,
உங்கள் விருப்பங்கள் அவர்களுக்குத் தோன்றும்போது
எல்லைக்கோடுகள் விரிவடையும்.
அவர்கள் இணையத்தில் மேயும் கால அளவை உங்களுக்கும் அனுமதி உண்டு.
அதிகப்படியானால் நீங்கள் அதற்கு அடிமையாகிவிட்டீர்கள் என்று
நிறுவும் வாய்ப்பு உள்ளது.
அதன்பிறகு அது இல்லையென்று நிறுவிய பின்னரே
உங்கள் சராசரி வாழ்வை தொடர முடியும்.
அவர்கள் நண்பர்களுடன் வெளியே சென்றால்
நீங்களும் செல்லலாம்.
ஆனால் வெளியூர்களுக்கு செல்ல அனுமதியில்லை.
ஏனென்றால், அவர்கள் தன் நண்பர்களுடன் வெளியூர் செல்வதில்லை.
அது ஒரு வகையான அக்கறை என்றே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
விருப்பங்களுக்கு தடைபோடுகையில் பொங்கும் அக்கறை
நடக்கவியலா உடல்நிலையில் நீங்களே சமைத்து சாப்பிடும்போது
ஏன் வரவில்லை என்று தோன்றினால்
உங்கள் மனநிலை நழுவிக்கொண்டிருக்கிறது என்று பொருள்.
உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.
விரைந்து செயலாற்றுங்கள்.

No comments:

Post a Comment