நண்பர்கள் சூழ்ந்த இடத்தில்
எனக்குப் பசிக்கிறதென்று சொல்வது போல
என்னுடையதாய் வரிக்கப்பட்ட
என் சுதந்திர வெளிகளில்
சொல்ல முடிவதில்லை.
அதிலென்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது?
ஒன்றுமில்லை தான். ஆனால்..
ஒன்றுமில்லை.
உனக்குப் பசிக்கிறதா என்கிற கேள்விக்கு
“ஆம்” என்ற பதில் எப்போதுமே
தர முடிந்ததில்லை.
“உனக்கு?” என்கிற எதிர்க்கேள்வியை தவிர.
கடைசியாய் அந்தக்கேள்வியைக் கேட்டவளொருத்தி
தன் கணவனைப் பிரிந்துவிட்டிருந்தாள்,
முற்றிலுமல்ல.
இந்த இடத்தில் நீங்கள்
சிறியதொரு புன்னகையை உதிர்க்க வேண்டும்.
அவமானங்களைச் சந்திக்க
துணை தேடுவதைப் போலவே
எனக்கும் பசிக்கிறதென்று
சத்தமாய்ச் சொல்ல உடன் ஒருவர்
இருக்கத்தான் வேண்டும்.
நாட்கள் செல்லச்செல்ல
எனக்குப் பசிக்கிறதென்று
கூக்குரல்கள் துரத்தும்.
தினமும் சிலமணி நேரங்களை உண்டு
அக்குரல்கள் ஆற்றுப்படும்.
சில ஒப்பந்தங்கள் பசிக்கும் வயிறுகளை
தலைமேல் ஏற்றிவிடுகின்றன.
வேண்டாமென்று ஒதுங்கவோ,
நானேற்ற ஒப்பந்தம் இது இல்லையென்றோ
தப்பிக்கவியலாது.
அதற்கு சில முன்னேற்பாடுகள் தேவைப்படுகிறது.
உள்ளிருந்து பிராண்டும் கரங்களை
அவ்வப்போது வெட்டிவிட வேண்டும்.
உணவு தயாரிக்கையில் யாரிடமும் எதுவும்
பேசிவிடவோ கேட்டுவிடவோ கூடாது.
அது உணவின் சுவையை பாதிக்கும்.
தேவையற்ற சமயங்களில், முக்கியமாக
விழாக்காலங்களில் ஆண்களுக்கு முன்னதாகவோ
அல்லது விரதமிருக்க வேண்டிய காலங்களில்
பசித்துவிட்டாலோ இன்முகம் மாறாமல்
காத்திருக்க நேரும்.
குடும்பத்தை காக்கும் தூணானவள்
நோன்பிருந்து வழிபடுவதே நல்லது.
இப்போதெல்லாம் என் பசியை
நானே வடிவமைக்குமளவு தேர்ந்துவிட்டேன்.
ஆம், என்னுடைய தட்டில்
சோற்றைப்பார்த்த பின்னர் தான்
பசிக்கத்துவங்குகிறது.
இருப்பினும்,
சமைத்தவுடன் பசி நீங்கி விடுகிறது.
அதுபோலத்தான், ஆடிக்களைத்து
உன்மீது வரிக்கப்பட்ட வீட்டை அடையும்போது
பசித்த வயிறுகள் காத்திருக்கலாம்.
பசித்த வயிறுகள் துரத்தும் வீடுகள்
ஒருபோதும் உனக்கு
அடைக்கலமாயிருக்க முடியாது.
அப்போதெல்லாம் ஏதாவதொரு காரணம் சொல்லி
விரைவாய் உண்டு முடித்து
இருளில் பொதிந்துவிடு.
ருசித்துண்ணுவதற்கான நேரம் இதுவல்ல.
ருசித்துண்ணுவதற்கான நேரம் இதுவல்ல.