Friday, February 27, 2015

இருவாய்ச்சி தேடல்



இருவாய்ச்சி தேடல் வால்பாறையில் இனிதே துவங்கியது. நண்பர் குழுவுடன் ஒரு சிறகில்லாத பறவையின் வழிகாட்டுதலில் இருவாய்ச்சி பறவைகளை கண்டுவிடும் நோக்கில் ஓர் பிப்ரவரி மாதத்தின் வார இறுதி நாட்களில் வால்பாறையை சென்றடைந்தோம். மலைச்சரிவுகளில் வரையாடுகளும் யானைகளும் சிங்கவால் குரங்குகளும் அணில்களும் வண்ணப்பறவைகளும் தன்போக்கில் இருப்பதை மனித மனதுக்கேயுரிய கண்கள் கொண்டு அவதானித்தோம். "Bird Watching" என்று தமிழ் கூறும் நல்லுலகால் குறிப்பிடப்படும் புள்ளினம் நோக்குதல் இதுவே எனது முதல் அனுபவம். நம் உடைகளில் சுமக்கும் வண்ணங்கள் அவை தம் உடலில் கொண்ட வண்ணங்களுக்கு இணையாகா. எவ்வித முதல் அனுபவத்தின் ஒவ்வொரு கணமும் மனதை விட்டு அகலாது என்கிற நியூட்டனின் நான்காவது விதிப்படி அமைந்த இந்த இனிய அனுபவத்தின் ஒவ்வொரு மணித்துளியையும் எழுதி அதை மீண்டுமொருமுறை வாழ்ந்துவிட முனைகிறேன்.



இருபதுக்கும் மேற்பட்ட பறவையினங்களை மலைச்சாரலில் கண்டுகளித்தோம் எனினும் இருவாய்ச்சி காணலே இப்பயணத்தின் நோக்கமாய் இருந்தது. Great Indian Hornbill எனப்படும் பெரும்பாத இருவாச்சி, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. அலகு உறுதியாகவும் நீண்டும் ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படுகிறது. மற்ற வகை இருவாச்சிகளை விட இது அளவில் பெரியதாக இருக்கிறது. இதன் கொண்டை இன்னொரு வாய் போல தோற்றமளிப்பதால் இது இருவாய்ச்சி என்றழைக்கப்படுகிறது. அது மருவி இருவாச்சி ஆகிவிட்டது. ஆண்பறவை இருவாயன்.

 இயல்பிலேயே இப்பறவைகள் ஒற்றை இணையுடன் மட்டுமே வாழும் தன்மையுடையது. பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான இதன் இனப்பெருக்க காலத்தில் கூடமைத்து முட்டை இடுகிறது. உயரமான மரப்பொந்துகளில் கூடமைக்கிறது. அச்சிறிய பொந்தினுள் பெண்பறவை சென்று தன்  உள்ளிருப்புக்  காலத்தை துவங்குகிறது. அது உள்ளே சென்றவுடன் தன் இறகுகளை உதிர்துவிடுகிறது. ஆண்பறவை, மண், தனது எச்சில் மற்றும் இந்த இறகுகளைக் கொண்டு மரப்பொந்தை அடைத்துவிடுகிறது. தன் அலகு மட்டுமே நுழையக்கூடிய அளவில் ஒரு சிறு துளையை  மட்டும் விட்டுவிட்டு மரப்பொந்தை முற்றிலுமாய் மூடிவிடுகிறது. அத்துளை மரத்துடன் ஒன்றி, அது இருப்பதே தெரியாத அளவில் ஆகிவிடுகிறது. 


இந்த நிலையில் இருவாச்சியின் கவனத்துக்குச் சிக்காமல் அதனை நோட்டமிட பசுமையுடனும் பாறையுடனும் ஒன்றும் வண்ணங்களில் உடையணிந்து, செயற்கை நறுமணங்கள் தவிர்த்து, தலையை மூடி, ஒலி எழுப்பாமல், அதன் கூடு இருக்கும் மரத்துக்கு சற்றே தொலைவில் காப்பி செடிகளின் மத்தியில் தலைமறைவாய் அமர்ந்து காத்திருந்தோம். சற்று நேரத்தில் எங்கிருந்தோ ஹெலிகாப்டர் ஒன்று மேலுழும்புவது போன்ற ஒரு பெரும் ஓசையுடன் இருவாயன் தன்  கூட்டை நோக்கி பறந்து வந்தான். கூட்டினருகில் அமர்ந்து சற்றே நோட்டமிடுகிறான். பின்னர் தன்  முழு கவனத்தையும் கூட்டில் உள்ளிருக்கும் தன்  காதலிக்கு தருகிறான். சுற்றியிருக்கும் மரங்களில் இருந்து தான் சேகரித்த சிறு பழங்களை தன் வயிற்றில் பாதுகாப்பாய் வைத்திருக்கிறான். ஒருமுறை அண்ணாந்து மேலே பார்த்து, வயிற்றை எக்கி, ஒரு பழத்தை வாய்க்கு கொண்டு வருகிறான். அலகின் உட்பகுதியிலிருந்து நுனிக்கு அப்பழம் மெதுவாய் உருண்டு வருகிறது. அந்த கூர்மையான நுனியில் கனிந்த அப்பழம் உறுதியாகவும் இயல்பான மென்மையுடனும் அமர்ந்திருக்கிறது..

இவ்வாறு, வயிற்று பையில் உள்ள பழங்கள் ஒவ்வொன்றாய் தன் அலகின் நுனிக்கு கொண்டு வந்து அதனை கூட்டின் துளை வழியாக உள்ளே நுழைக்கிறான். உள்ளிருக்கும் இருவாச்சி அப்பழங்களை ஒவ்வொன்றாய் தன்  அலகுகளை நீட்டி வாங்கிக்கொள்கிறாள். மிகவும் மென்மையான அத்தி போன்ற பழங்கள் பழுத்த பின், அதன் மிக உறுதியான அலகுகளால் கொய்யப்பட்டு, தன் வயிற்றில் சேகரிக்கப்பட்டு மீண்டும் அலகின் நுனிக்கு கொண்டு வரப்பட்டு, தன் இணையை சென்றடையும்வரை அதன் தோல்கூடத்  துவளாமல்  பாதுகாக்கும் இருவாயன் மனித குலத்துக்கு மகத்தான உண்மைகளை வார்த்தைகளின்றி உணர்த்துகிறான். மிக நிச்சயமாய் இது இருவாச்சி காவியமல்ல.. இருவாயன் காவியம்!! 


உணவூட்டுதல் சுமாராக நான்கு நிமிடங்கள் நடக்கிறது. பதினைந்து முதல் பதினேழு நிமிடங்கள் வரை நீடிக்கும் உணவூட்டுதல் நான்கு நிமிடங்களே நீடிக்கிறது. தகுதியான பழங்கள் அவ்வளவு மட்டுமே கிடைத்திருக்கிறது இருவாயனுக்கு. இந்தத் தட்டுப்பாடு நம்மால் தரப்பட்டது என்கிற உண்மை கனமாய் இருக்கிறது. இருவாயன் அதுபற்றி நம்மை குற்றஞ்சாட்டவில்லை. ஆனால்  மலைச்சரிவு முழுதும் எண்ணற்ற காப்பி பழங்கள் பழுத்திருப்பினும் அவன் அவற்றை தொடுவதில்லை. தான் கொண்டுவந்த நல்ல பழங்களைத் தன்  இணைக்கு ஊட்டிவிட்டு அடுத்த தேடலுக்கு கிளம்புகிறான் இருவாயன். 

1 comment: