Thursday, January 8, 2015

பூக்குழி (புதினம்) - பெருமாள் முருகன்


        பூக்குழி என்பது பூக்களை கொண்ட குழி அல்ல. நெருப்புக்கங்குகளால் நிரப்பி, சாம்பல் பூக்காமல் கவனமாக விசிறப்பட்டு கனன்று கொண்டிருக்கும் குழி. மங்கல வழக்காய் பயன்படுத்தும் போதிலும் ஒருவிதமான அச்ச உணர்ச்சியை விதைக்கிறது. நாம் வாழ்ந்துவரும் சமகாலத்துக்கு சில பத்தாண்டுகள் முன் நடக்கும் காலமும் களமும்; நம் சமூகத்தில் இருக்கும் இறுக்கமான சாதிய மனோபாவத்தையும், அது யாரிடம், எங்கு, எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் கலப்புமணம் புரிந்துகொண்ட இருவரின் வாழ்வனுபவமாக விவரிக்கிறது. காலமும் களமும் மாறியிருப்பினும் மனோபாவங்களில் பெரும் மாறுதல் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற வருத்துடனே ஆசிரியர் இந்நாவலை முன்வைக்கிறார். கலப்புமணம் புரிந்த குற்றத்துக்காய் மரணித்த தருமபுரி இளவராசனுக்கு இந்நாவலை சமர்ப்பித்திருக்கிறார். 




       இரு வேறு சாதிகளை சேர்ந்த குமரேசனும் சரோஜாவும் மணம் முடித்து, குமரேசனின் ஊருக்கு தம்பதியாய் வந்து பஸ்ஸை விட்டு சரோஜா தான் வலது காலை எடுத்துவைத்து இறங்குவதில் துவங்குகிறது கதை. வழக்கங்களும் குறியீடுகளும் முற்றிலும் வேறானவை என்பதை முதல் சில நிமிடங்களிலேயே அறிந்துகொள்கிறாள் சரோஜா. வெயிலுக்கு புடைவை தலைப்பை எடுத்து முக்காடு போடும் தன் மனைவியிடம் குமரேசன், "இங்கல்லாம் முக்காடு போட்டா எழவுக்கு போறம்னு அர்த்தம். இந்தா இத போட்டுக்க" என்று தன் மேல் துண்டை தருகிறான். தன் குடும்பத்தையும் வாழ்ந்த சூழலையும் காதலுக்காய் துறந்து வந்த பெண்ணின் படபடப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

 பள்ளி முடித்து வேலை பெரிதாக அமையாமல், 'புழங்காத' சாதிப் பயல்களுடன் காட்டு வேலைக்குப் போகவும் அனுமதிக்கப்படாமல், பாறையில் செய்வதறியாது இருக்கும் குமரேசனை, முட்டை விற்கும் பாய் தோலூருக்கு சோடா கடையில் வேலை கொடுத்து அழைத்து செல்கிறார். அங்கே அருகில் லைன் வீட்டில் குடியிருக்கும் சரோஜாவுடன் அரும்பும் காதல் எவர் கண்ணிலும் படாமல் அவர்கள் இருவருக்குமேயான அந்தரங்கமாய் வளர்கிறது. அது குமரேசனை பற்றிக்கொண்டு வேறெதையும் பற்றி யோசிக்காமல் அவனுடன் கிளம்பிச்செல்ல வைக்கிறது. அவனுக்கு அவள் மீதான பிரியம் அத்தகையது. 

போகிற வழியில் விசாரிப்பவர்கள் முதல், அவனுடைய தாயார்வரை - ஊரார், உற்றார், உறவினர் அனைவரும் அப்பெண்ணின் சாதி என்ன என்பதை அறியும் ஆவலில் இருக்கிறார்கள். அது அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டுமல்ல, அதை வைத்தே தான் நடத்தப்படும் முறையும் முடிவு செய்யப்படும் என்பதை சரோஜா அறிந்தே இருக்கிறாள். தோலூரில் ஒற்றை அறை கொண்ட ஓட்டு வீட்டில், குடும்பம், அண்டை அயலாருடன் இருந்து வந்த சரோஜாவுக்கு ஆளரவம் அற்ற கிராமமும் மொட்டை பாறையும் அவள் வசிக்க வேண்டிய குடிசையையும் கண்டவுடன் மனதுக்குள் ஏதோ விட்டுப்போகிறது.  குமரேசன் தன் மீது வைத்திருக்கும் பிரியத்துக்காய் அதை ஏற்றுக்கொள்கிறாள். 

தன் இருபது வயதில் விதவைக் கோலம் பூண்ட குமரேசனின் தாய், தன் மகன் - ஒருத்தியை - அதிலும் எதுவும் கொண்டுவராத ஒருத்தியை மணம் முடித்ததை ஏற்காமல் உக்கிரமாய் இருவர் மீதும் வெளிப்படுத்துகிறாள். அவளுடைய வசவுகள் ஒப்பாரியாகவும் ஆடுகளை வைவதுமாக சரோஜாவின் மீது மறைமுகமாயும் நேரடியாயும் வெளிப்படுத்தப்படுகிறது. தன் அம்மாவின் குணம் தான் தெரிந்தது, தன்னை பாசமிகுதியுடன் வளர்த்த அப்புச்சியும் மாமன்மார்களும் முதலில் கொஞ்சம் திட்டினாலும் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று கொண்டிருந்த நம்பிக்கையிலும் இடியாய் இறங்குகிறது அவர்கள் உமிழும் வெறுப்பு. தண்ணீர் தரும்போதும் கவனமாக அவளுக்கு தனி அலுமினிய கிளாசில் தரப்படுகிறது. காதல் மணம் புரியும் அனைவரையும் காயப்படுத்த நாம் சமூகம் கையாளும் உத்தி அவர்களின் நேசத்தை உடல் ரீதியாக கொச்சைப்படுத்துவது தான். அதுவே இவர்களுக்கும் நடக்கிறது.




பகலில் வெப்பத்தை உள்வாங்கி இரவிலும் வெம்மையை வெளியிடும் பாறை ஒரு முக்கிய குறியீடாக கதை நெடுகிலும் வருகிறது. சாதி உணர்ச்சி கொண்டு கடினப்பட்டுப்போன, கொஞ்சமும் ஈரமற்ற உள்ளங்களை பால்வேறுபாடின்றி சித்தரிக்கிறது. வெளியூர்களில் தொடுப்புகள் இருப்பது பற்றியோ ஒழுக்கம் பற்றியோ எழும் கண்டனங்கள் அல்ல அவை. அவற்றை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வோம், ஆனால் சாதி மாறிய 'திருமணத்தை' ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதிலும், புழங்கும் சாதியாக இருந்தால் தீட்டு கழித்துக்கொள்ளலாம். புழங்காத சாதியாய் இருந்தால் காலத்துக்கும் ஒதுக்கி தான் வைத்திருப்போம் என்று ஊர் கூட்டம் போட்டு முடிவாகிறது. அது குமரேசனின் வாழ்வை மட்டுமல்ல, வேறெங்கும் சென்று பிழைக்க இயலாத அவனுடைய தாயாரின் இருப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. 

வெள்ளைத்  தோல்க்காரியை கூட்டிக்கொண்டு வந்துவிட்டான் என்கிற குமரேசன் மீதான அவன் பங்காளிகளின் பொறாமை சரோஜாவை சீண்டுவதில் வெளிப்படுகிறது. உள்ளூர்க்காரிகளை பார்த்தாலே தலையை திருப்பிக்கொண்டு செல்லும் குமரேசனை எதை காட்டி மயக்கினாய் என்று அவன் உறவுக்கார பெண்களும் அவளை நுட்பமாக அவமானப்படுத்துகின்றனர். இரு புறங்களிலும் இருந்து வரும் தாக்குதல்களுக்கு சரோஜாவே இலக்காகிறாள். பெண்ணுடல் மீதான வன்முறை ஆண்களாலும் பெண்களாலும் வாய்ப்புக்குத் தக்க வீச்சுகளில் வெளிப்படுத்தப்படுகிறது.

சரோஜாவின் நிறத்தைப் பார்த்து, சாதி பற்றிய கேள்விகள் அதிகம் வராது என்று எண்ணிய குமரேசனுக்கு சில நாட்களிலேயே அது தப்புக்கணக்கு என்று புரிபடுகிறது. இப்படி ஒரு பிரச்சினை நடந்த உடனே குமரேசனையும் சரோஜாவையும் பல விதங்களில் கேட்டும் பேச்சு வழக்கை  வைத்தும் சாதியை கண்டுபிடிக்க துடிக்கிறார்கள். அவர்களை காண வரும் ஒவ்வொருவரின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. எதற்கும் இருவரும் பிடி கொடுக்காமல் இருக்கவே ,  முட்டை பாயை கண்டுபிடித்து தோலூர் வரை சென்று அப்பெண்ணின் சாதியை கண்டுபிடித்து வருகிறார்கள். 

புழங்காத சாதி என்று தெரிந்த உடனே, கோவிலில் நோம்பி சாட்டும் பூஜையும் நிறுத்தப்படுகிறது. என்ன செய்வதென்று குமரேசனின் தாயாரே முடிவு செய்கிறாள். அதற்கு சாதி கட்டுமானம் காக்க ஊரே உடந்தை ஆகிறது. குமரேசன் வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருக்கும்போது தன்னை கொலை செய்ய திட்டமிட்திருப்பதும் அவர்களனைவரும் ஒன்று திரண்டு இருப்பதும் சரோஜாவுக்கு தெரிகிறது. அவன் திரும்பி வந்து தன்னை அழைக்கும்போது எதிர்க்குரல் கொடுத்தே தீர வேண்டும். அதற்காகவேனும் தான் இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் முள்ளுக்காட்டுக்குள் தஞ்சம் புகுகிறாள். அவள் அங்கிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அதற்கு சுற்றிலும் தீ வைக்கப்படுகிறது. அதில் அவள் பிழைக்க வேண்டுமே என்கிற பதைபதைப்பை நமக்கு கொடுத்து முடிவை நம்மிடமே விட்டு நிறைவு பெறுகிறது கதை. சாதி மற்றும் ஆதிக்க மனோபாவம் மனிதனின் மெல்லுணர்வுகளை பொசுக்கும் வெம்மை நம்மை சூழ்கிறது.

இன்று இருக்கும் சமூக சூழலுக்கும் சில பத்தாண்டுகளுக்கு முன்னான சூழலுக்கும் சாதி, பாலின ஆதிக்கத்துக்கான இவ்விதிகளில் மாறுபாடுகள் ஏதும் இல்லை. வெளிப்படும் முறை மட்டுமே காலத்துக்கும் வளர்ச்சிக்கும் தக்கவாறு மாறியிருக்கிறது. அன்று உக்கிரமாக வெளிப்பட்டது இன்று நாசூக்காக வெளிப்படுகிறது. இக்கதை முழுதுமான பேசுபொருள் சாதியாய் இருப்பினும் இருவரும் என்ன சாதி என்பதை கடைசிவரை வெளிப்படையாய் சொல்லவில்லை. கொங்கு வட்டார வழக்கு மொழியும் ஆங்காங்கே சில குறிப்புகளும் அவர்கள் என்ன சாதி என்பதை குறிப்பாய் நமக்கு உணர்த்துகின்றன. தமிழகத்தின் இப்போதைய சாதிச்சூழலில் சாதியை வெளிப்படுத்தாமல் இருப்பதே வாசகருக்கும் ஆசிரியருக்கும் நல்லது என்கிற புரிந்துணர்வு இருப்பதால் வெளிப்படுத்தவில்லையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை. (இந்த கட்டுரை எழுத துவங்கி சில நாட்களில் சில மத வெறி அமைப்புகள் இவருடைய 'மாதொருபாகன்' நூலை எதிர்த்து சில்லறை அரசியலில் இறங்கியிருக்கின்றனர். அதனால் வெளிப்படுத்தாமல் இருந்ததே நல்லது என்றும் தோன்றுகிறது). நுட்பமான மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதை தன்னுள் பேணவும் அத்தகைய உணர்வு கொண்டவர்களிடையே தோன்றும் நேசத்தை அங்கீகாரத்துக்கு எடுத்துசெல்பவர்களும், நம் சமூகம் என்னும் பூக்குழியை கடந்தே செல்ல வேண்டி இருக்கிறது.

No comments:

Post a Comment