நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே
~ சத்திமுத்தப் புலவர் ~
நாரையே நாரையே, செந்நிற கால்களை உடைய நாரையே.. பழங்களை உடைய பனையின் கிழங்கு பிளந்ததை ஒத்த, பவழம் போன்ற நிறத்தினை கொண்ட, கூரிய அலகுகளை கொண்ட செங்கால் நாரையே.. நீயும் உன் மனைவியும் தென் திசையில் உள்ள குமரியில் நீராடி வட திசைக்குச் செல்வீர்களாயின் எனது ஊரான சத்திமுத்தத்தில் உள்ள குளத்தில் தங்கி, நனைந்த சுவர்களை உடைய தன் வீட்டின் கூரையில் இருந்து கனைக்கும் பல்லியின் குரலை கேட்டு பாடு பார்த்திருக்கும் என் மனைவியை கண்டு, "மாறன் அரசாளும் கூடலில் - ஆடையின்றி, வாடைக்காற்றில் மெலிந்து, கைகளை கொண்டு மார்பினை மறைத்து, கால்களை கொண்டு உடலை தழுவி, பேழைக்குள் இருக்கும் பாம்பினைப் போலச் சுருண்டு உயிர்த்திருக்கும் இந்த ஏழையை கண்டேன்" என உரைக்குமாறு நாரையை தூது விடுகிறார்.
இப்புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. எனவே அவரது ஊராகிய சத்திமுத்தத்தின் பெயரால் அறியப்படுகிறார். புலவர் தன் வறுமை காரணமாய் வேறோர் ஊருக்குச் சென்றிருந்த வேளையில் அங்கோர் நாரையை தன் மனைவிக்கு தூதாய் அனுப்புவதாக அமைந்துள்ள தனிப் பாடல். கவித்துவமும் அழகும் நிறைந்த இப்பாடல் பிற மரபுச் செய்யுள் போலன்றி நேரடியாகப் பொருள் தருகிறது. சொல்லப்படாத பல செய்திகளையும் சொல்கிறது.
குழந்தையை குழந்தாய் என்றழைப்பதைப் போல, மிகுந்த அன்புடன், நாரையை நாராய் என்றழைக்கிறார். வடதிசை நோக்கி செல்லும் இப்பறவையை, தன்னை பிரிந்து வாடும் தன் துணைவிக்கு தூதாக அனுப்புகிறார். எங்கோன் மாறன் என்று புலவர் உரைப்பதன் மூலம் அவர் தற்போது இருக்கும் நாடு பாண்டிய நாடு என்பது புலனாகிறது. (மாறன் : பாண்டிய மன்னர்களுக்கு வழங்கப்படும் பெயர். கூடல் நகர் - மதுரை) அவரது ஊராகிய சத்திமுத்தம் வடதிசையில் சோழ நாட்டில் உள்ளது. (சக்தியாகிய உமை சிவனை தழுவி முத்தமிட்டதால் இப்பெயர் வழங்கப்படுவதாக தல வரலாறு உரைக்கிறது) வாடைக்காற்று உடலை வாட்டும் கூதிர் காலத்தில் இப்புலவர் அங்கிருக்கிறார். செங்கால் நாரை (white stork) தமிழகத்துக்கு வரும் காலம் நவம்பர் முதல் மார்ச் வரை. கூதிர் காலமாகிய பின்பனிக்காலம் இத்துடன் பொருந்துகிறது.
நாரையின் அலகினை பிளந்த பனங்கிழங்குக்கு ஒப்பு நோக்கிய அப்புலவரின் உவமைக்கு மகிழ்ந்து அவரின் வறுமையை போக்கினான் நகர்வலம் வந்த பாண்டிய மன்னன் மாறன் வழுதி. மன்னன் அளித்த பரிசிலை பற்றி கீழ்கண்டவாறு பாடுகிறார்.
வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்
தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே.
வெறும் சோறு பொங்குவது கூட அரிதாகிவிட்ட தன் வறுமை சூழலில், கிளிப்பிள்ளைக்கும் எறும்புக்கும் கூட போதுமானதாக இருக்காது என் வீட்டிலிருக்கும் உணவு. அத்தகைய வறுமையின் பிடியில் இருந்த எனக்கு குடிதாங்கியான மன்னனை கூடிய பின் அவனளித்த பரிசில் யானையின் கவளம் கொள்ளாத அளவுக்கு தன் நிலையை உயர்த்தியதாக கூறுகிறார்.