Monday, December 11, 2017

தரப்படாத முத்தங்களும்
பெறப்படாத முத்தங்களும் அதிகம் உண்டு என்னிடம்.
அவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
அவை கடலளவு ஆகலாம்.
கடல் தாண்டியும் அவற்றை தேடிச் செல்லலாம்.
அது ஏன் வேறெதையும் அல்லாது
சிறு அணைப்புகளையும் முத்தங்களையுமே மனம் தேடுகிறது?
இந்த மனதுக்கு வேறு வேலையே இல்லை.
விழித்திருக்கும்போதெல்லாம் முத்தங்கள்
அடியாழத்தில் நீந்திக்கொண்டே இருக்கின்றன.
அவை மேலேயும் வருகின்றன, யாரும் பார்க்கும் முன்
ஒரு சிறு குமிழி காற்றை விழுங்கிவிட்டு
அவை மீண்டும் அடியாழத்திற்கே செல்கின்றன.
அங்கே நீந்த இடம் உண்டு
அங்கிருக்கும் தண்ணீர் உறைவதில்லை
அங்கு புலப்படும் அசைவுகள்
மேலே உணரப்படுவதில்லை.
அதுவே நல்லது.
சில முத்தங்களின் ஈரம் உதடுகளிலேயே நின்று விடுகிறது.
ஆண்டுகளாய் காத்திருந்து பெறும் முத்தம் உயிர்ப்பிழக்கையில்
மிஞ்சுவது துயரம் மட்டுமே.
என்னை விழுங்க வரும் அதன்
எட்டு கரங்களையும்
வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.

Sunday, December 10, 2017

தடயங்கள்


தடயங்கள் முக்கியமானவை
அவையே வரலாற்றின் சாட்சியங்கள்
அவையே வரலாற்றை உருவாக்குகின்றன
புத்தகங்களில் குடியேறுகின்றன 
சுற்றியுள்ளோரின் மனங்களில் 
நாம் விரும்பியதை நிறுவுகின்றன.

மருத்துவமனையிலிருக்கும் அப்பாவை பார்க்க 
நான் போவது முக்கியமில்லை,
ஆனால் உனக்கு முன் நான் போய்விட வேண்டும்.
நான் என்னவாய் இருக்கிறேன் என்பதைவிடவும் 
என்னவாய் தெரிகிறேன் என்பது முக்கியம்.
இருப்பை விடவும் இருப்பின் தடயங்கள் முக்கியம்.
பின்னொரு நாளில் அந்த தடயங்களனைத்தும் 
ஒன்று சேர்ந்து துரத்தும்போது என்ன செய்யப்போகிறாய்?

முடிவுசெய்யப்பட்டவை


வாழ்க்கைக்கான கால அட்டவணை போடப்படுகிறது 
அதில் பலருக்கும் ஆர்வமுள்ளது
நீங்கள் ஏன் எனக்கான அட்டவணையை தயாரிக்கிறீர்கள் 
என்று மனம் ஓலமிட்டுக் கூப்பாடு போடுகிறது
அக்கறையாய் அலங்கரிக்கப்படுவதில் இருக்கும் சிக்கல்கள்.
 புன்னகைக்க வேண்டும்
புண்படுத்தாத காரணங்களை 
கடந்த ஒருவாரமாய் மனம் அசைபோடுகிறது
வரிசைப்பட்டியல் கூட தயார் நிலையில்
போர்க்கால ஏவுகணைக்கு சற்றும் குறைந்ததல்ல இது
சமயம் சிறிது தப்பினாலும் பிசகிவிடும்.

எனது முத்தங்களை அப்படியே விழுங்கிவிடுகிறேன்
ஏனென்றால் அவற்றுக்கான முடிவுகள் வெளிப்படுகையில் 
என் உதடுகளில் 
இரண்டொரு ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்கலாம்