பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்க நேர்ந்ததை எண்ணி நான் அவமானப்பட்ட காலங்கள் இருந்திருக்கிறது. என் அப்பாவாகப்பட்டவர் ஆங்கில வழிப் பள்ளிகளில் கட்டணம் உண்டு என்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே என்னை தமிழ் மீடியத்தில் சேர்த்துவிட்டார் என்று எண்ணியிருந்த காலங்களும் உண்டு. உறவினர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அத்தகைய எண்ணங்களையே குழந்தைகளிடம் விதைக்கிறார்கள். (உங்க அப்பாதான் மாச சம்பளம் வாங்குறவர் ஆச்சே, உன்ன ஏன் இங்கிலீஷ் மீடியத்துல சேர்க்கலை?) சீருடை வேறு.. இங்கிலீஷ் மீடியத்துக்கு கவுன் போட்டு அனுப்புவார்கள். நமக்கு வெறும் பாவாடை சட்டை. அவன் 'எ பார் ஆப்பிள்".. நாம, "அம்மா இங்கே வா வா". அவங்கள ஸ்கூல் பஸ் வந்து கூட்டிட்டு போகும். நமக்கு போகும் வழியில் சுண்டக்காம்பாளயத்து பெரிய மரத்தில் புளியங்காய் அடித்து தின்றுகொண்டும் ரத்தினசாமி அண்ணன் தோட்டத்தில் விளாம்பழம் பொறுக்கிக்கொண்டும் - நடராஜா சர்வீஸ் தான். ஒடம்பு சரியில்ல, நடக்க முடியலன்னா ஐம்பது காசு டிக்கட்டில் டவுன்பஸ். இப்படியாக ஆரம்பித்த புகைச்சல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
செய்யுள் எல்லாம் எதுக்கு படிக்கணும்.. வாழ்க்கைக்கு ரொம்ப தேவையா? திருக்குறளும் நாலடியாரும் நாளைக்கு நமக்கு சம்பாதிக்க உதவுவார்களா? அதை படிக்கிறது மட்டுமில்லாமல் விளக்கம் வேற எழுதணும்.. அதையே சீர் பிரித்து வாய்ப்பாடு வேற எழுதணும்.. எங்கே வெண்பாவுக்கான தளை தட்டுகிறதுன்னு கண்டுபிடிக்குற போட்டி வேற அப்பப்போ வகுப்பில நடக்கும். இந்த கேள்விகள் எல்லாம் இருந்தாலும் தமிழாசிரியை தன் முகபாவங்களுடன் ஒவ்வொன்றாய் எங்களுக்கும் புரியமளவு அனுபவித்து வகுப்பெடுத்தது இன்னும் மறையாத சித்திரமாய் மனதில் இருக்கிறது. அறிவியல் மற்றும் கணித பாட வகுப்புகள் ஒருவித பயத்தை விதைத்தபோது தமிழ் வகுப்பு மகிழ்ச்சியான ஒன்றாகவே இருந்து வந்தது (என்ன பிள்ளே, இப்படி எழுதி வச்சிருக்கிற? பத்தாம் வகுப்பு படிக்கிற, இந்த மாதிரி பிழையுடன் எழுதலாமா.. என்று திட்டு வாங்கிய போதும்..). ஆனால் போகப் போகத் தான் அதைப் படித்தது பிழைப்புக்காக அல்ல வாழ்க்கைக்காக என்று புரிகிறது.
ஆங்கில இலக்கணத்தின் அடிப்படையை தமிழிலே சொல்லி வேறுபாடுகளை புரிய வைத்து இலக்கண சுத்தமாக எழுத வைத்ததில் ஆங்கில ஆசிரியைகளின் பங்கு அளப்பரியது. எல்லாரும் மாஸ்டர் நோட்ஸில் இருக்கும் நாலு பாராவை உருப்போட்டு எஸ்ஸே எழுதிக்கொண்டிருந்த காலத்தில், பாடத்தை (பெரும்பாலும் கதையாகத் தான் இருக்கும்) படித்துவிட்டு, நீயாக எழுதும் கதை தான் எஸ்ஸே என்று புரிய வைத்தது அதை செய்ய வைத்த ஈத்தாகுட்டி சிஸ்டரும் செல்வி டீச்சரும் எண்ணுவதை எழுத்தில் கொண்டுவருவதற்கான உந்துதலை கொடுத்தவர்கள்.
கற்பனை வறட்சியுடன் வலிந்து திணிக்கப்படும் பாடங்களுள் கணிதமும் இயற்பியலும் முதலிடம் பிடிக்கும். இயற்பியலாவது சோதனை வேதனை என்று ஏதாவது செய்முறை இருக்கும்.. கொஞ்சம் ஒப்பேற்றி விடலாம். கணிதம் இருக்கிறதே.. என்ன காரணத்துக்காய் படிக்கிறோம் என்றும் தெரியாது. எங்கே பயன்படுத்தப்போகிறோம் என்றும் தெரியாது. தேற்றங்கள் எல்லாம் தோற்றப்பிழையுடன் காட்சியளிக்கும். பிதாகோரஸ் கண்டுபிடித்தார் சரி.. நாம் படித்து என்ன செய்யப்போகிறோம்? இதெல்லாம் எதுவுமே இல்லாமல், நூறு சதவீதம் ஒன்றே குறிக்கோளாய் 'படித்தது' கணிதம். வகையீடும் வகையீட்டு நுண்கணிதமும், தொகையீடும் தொகையீட்டு நுண்கணிதமும் வகைதொகையில்லாமல் வதைத்தது. ஆனால் என்ன செய்வது? நூறு சதம் வாங்காவிட்டால் வாழ்க்கையே இருண்டு விடுமே? (அப்படிதான் நம்பினோம், நம்ப வைக்கப்பட்டோம்.) இன்றும் பலருக்கும் அதன் பயன் என்னவென்று அறிவதற்கு முன் அதை தூக்கிஎறிந்துவிட்டு பிழைப்பை பார்க்க வேண்டிய சூழல் வாய்த்துவிடுகிறது.
பள்ளிக்கூடத்தில் தமிழ் தமிழ் வழி மாணவியரின் சீருடை தாவணியாகவும் ஆங்கில வழி மாணவியரின் சீருடை சுடிதாராகவும் இருந்தது பொறாமை தீயை மேலும் வளர்த்தது. கல்லூரி முதல் வருடம் அது எரிமலை குழம்பாகியது.. பொறியியல். ஆங்கிலம் மட்டுமே விரிவுரையாளரின் மொழியும் கூட.. பெயருக்கு கூட தமிழ் ஒரு பாடமாக இல்லை. வேதிச் சொற்கள் பரவாயில்லை. இயற்பியல், கணித கலைச்சொற்கள் முற்றிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு படித்தவை. வகையும் தொகையும் இல்லாமல் போனால் பொறியியல் பொரியலாகி செமஸ்டர் சூப் வைத்துவிடும். சென்ட்ரிஃப்யுகல் ஃபோர்சுக்கும் சென்ட்ரிபீட்டல் ஃபோர்சுக்கும் மையநோக்குவிசை மையவிலக்குவிசை என்று கண்டுபிடிக்க வாரங்கள் தேவைப்பட்டது. அதற்காவது வரையறை படித்து கண்டுபிடித்து விடலாம். கணிதத்தில் வெட்டு இன்டர்செக்ஷனாகவும் குத்துக்கோடு ஆல்டிடுடாகவும் நெஞ்சிலே குத்தியது.
செமஸ்டர் வந்த உடனே பீதி எல்லை கடந்தது. பரீட்சையில் தோல்வியடைவது என்பது கற்பனைக்கு எட்டாத அவமானமாய் பதிவாகி இருந்தது. முதலாண்டு கணிதம் புலிகளையே புல் தின்ன வைத்தது.. சுமார் ரகம் அதுவும் தமிழ் மீடியம் என்ன செய்யும்? இரவெல்லாம் தூங்காமல் ஒவ்வொன்றுக்கும் வரையறையும் அதன் தமிழ் பெயரும் ஆங்கில பெயரும் எழுதி அதனுடனே உருண்டு புரண்டது.. விளைவு.. அம்பது மார்க் வாங்கி மயிரிழையில் உயிர் தப்பினேன்..
செமஸ்டர் வந்த உடனே பீதி எல்லை கடந்தது. பரீட்சையில் தோல்வியடைவது என்பது கற்பனைக்கு எட்டாத அவமானமாய் பதிவாகி இருந்தது. முதலாண்டு கணிதம் புலிகளையே புல் தின்ன வைத்தது.. சுமார் ரகம் அதுவும் தமிழ் மீடியம் என்ன செய்யும்? இரவெல்லாம் தூங்காமல் ஒவ்வொன்றுக்கும் வரையறையும் அதன் தமிழ் பெயரும் ஆங்கில பெயரும் எழுதி அதனுடனே உருண்டு புரண்டது.. விளைவு.. அம்பது மார்க் வாங்கி மயிரிழையில் உயிர் தப்பினேன்..
அப்புறம் ஆரம்பித்தது திட்டமிடுதல்.. அதே முறையை செமஸ்டர் ஆரம்பத்திலே செய்து வரையறையை விளக்கத்துடன் ஒப்பிட்டு படிக்க துவங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் பேச ஆரம்பித்தது. ஆங்கில வழி கல்வியின் இன்னொரு முக்கிய பயனாக சொல்லப்படுவது ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும் என்பது. சரளமாக பேசுவதற்காக ஆங்கில மீடியம் தேர்ந்தெடுப்பது அரை டம்ளர் தண்ணி குடிக்க ஆற்றிலே குதிப்பதை போன்றது. மேடை ஏறி சரளமாக பேசுவதற்கு துணிச்சல் மட்டுமே முக்கியம் என்பதை கல்லூரி முதலாண்டில் முதல் செமினார் புரிய வைத்தது. அப்புறம் ஆங்கில மீடியத்தில் படித்து கரைகண்ட நண்பர்கள் கூசாமல் செய்யும் இலக்கண, எழுத்து பிழைகள் கண்ணுக்கு தென்படத் துவங்கியது. முதலாம் ஆண்டு ஐம்பத்து ஐந்து சதமாக இருந்தது இறுதியாண்டில் எண்பத்து ஐந்து வாங்குமளவுக்கு புரிதல் இருந்தது. (புரிதல் மட்டுமல்ல, எப்படி எழுதினால் மதிப்பெண் கிடைக்கும் என்கிற நுட்பமும் கை வந்தது.) ஒவ்வொரு பாடத்திலும் படிக்கும்போது ஏழாவது எட்டாவது படிக்கும்போது வந்ததெல்லாம் தொடர்புபடுத்திப் புரிந்துகொண்டது, அதே ஆங்கில வழி பீட்டர்களுக்கும் தனிப்பட்ட முறையில் காரண காரியங்களை விளக்கிப் புரியவைக்கும் அளவுக்கு தாய்மொழி அறிவியலின் புரிதல் இருந்தது. நிறைக்கும் எடைக்கும் பருமனுக்கும் நமக்கு தமிழ் தரும் பொருளும் புரிதலும் ஆங்கிலம் தருகிறதா என்றால் என்னளவில் இல்லை என்று தான் சொல்வேன். வரையறைகளை ஒப்பித்து ஒப்பேற்றி விடலாம். ஆனால் அதை நாம் பயன்படுத்துகையில் தெரியும் நமது புரிதல்.கொஞ்சம் புரிந்தால் மட்டுமே ஃபோரியரும் லாப்லாசும் கருணை செய்வார்கள். (அதுவும் எதற்கென்று தெரியாமல் படித்தது நம் பாடத்திட்டத்தின் மகிமை) டிகிரிஎல்லாம் வாங்கிவிட்டு எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் இந்திய அறிவியல் பயிலகத்தில் சேர்ந்த பிறகு தான் புரிந்தது, வகை/தொகை இல்லாமல் போரியர் டிரான்ச்பார்ம் இல்லை.. ஃபோரியர் இல்லாமல் நாம் கேட்கும் டிஜிட்டல் எம்.பி.த்ரி. பாடல்கள் சாத்தியமில்லை என்று. வகை என்றால் வகைப்படுத்துதல் - அதாவது ஒரு வகையான பிரித்தல், தொகை என்றால் தொகுத்தல் என்று தமிழாசிரியை விளக்கியது இருபது வருடங்கள் கழித்து காதிலே ஒலித்தது.
அது தான் பெங்களூரில் இருந்த சில வருடங்களில் கன்னடம் பேசவும் படிக்கவும் கற்றுக்கொண்டதற்கான அடிப்படை. ஜெர்மனி சென்று பதினைந்து நாட்கள் மட்டுமே இருந்த போதும் ரயில்வே அறிவிப்புகளை மட்டுமேனும் புரிந்துகொள்ளுமளவுக்கு கற்றதும் அதனாலேயே. இதுவரை இந்தி தெரியாது. ஆனால் வடக்கே சென்றால் ஒரு வருடத்தில் அதையும் கற்பேன் என்று எழுதி தர என்னால் முடியும். எனவே தமிழ் வழி கல்வியே தமிழர்க்கு சிறந்தது என்று அனுபவபூர்வமாய் உணருவதற்கு இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது. மேற்படிப்பில் ஆங்கிலம் ஒரு தடையல்ல. ஆங்கில வழியில் பெருமையுடன் படித்த பலர் பிழையுடன் எழுதி சில ஆயிரங்கள் அதிகம் சம்பாதிக்கும் சமகாலத்தில் தமிழ் வழியில் படித்து இதுவரை பத்து தேசிய அளவிலான, மூன்று சர்வதேச அளவிலான மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிப்பித்து, சில ஆயிரங்கள் குறைவாய் வாங்கினாலும் நிறைவாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
வெக்டரையும் இயற் கணிதத்தையும் அது எங்கே எப்படி செயல்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள, ஆண்டுகள் தேவைப்பட்டது. இன்றும், நம் பள்ளிகளில் கணிதம் கற்பனையை தூண்டுவதில்லை (அது தமிழ் வழியானாலும், ஆங்கில வழியானாலும்). கற்பனை இல்லாமல் கணிதம் இல்லை. அத்தகைய புரிதலின்றி இயற்பியலும் இல்லை. தமிழிலாவது என்ன செய்கிறது என்பதை கொஞ்சம் யோசித்தால் அதன் பெயரே நமக்கு சொல்லிவிடும். மையத்தை நோக்கி வரும் விசை மைய நோக்கு விசை, மையத்திலிருந்து விலகிச்செல்லும் விசை மைய விலக்கு விசை, உந்திச் செல்வது போன்ற பண்புடைய விசை உந்தம், காந்த விசை எதுவரை புலனாகிறதோ அதுவே காந்தப் புலம்... இங்கே புலன்களுக்கும் புலனாவதற்கும் உள்ள தொடர்பை தாய்மொழி மட்டுமே தருகிறது. இன்றுமே 'மேக்னடிக் பீல்ட்' என்பதில் 'பீல்ட்' என்கிற வார்த்தை புல்வெளி போன்ற தோற்றத்தையே என் கற்பனைக்குத் தருகிறது. ஒரு வார்த்தையின் பல்வேறு பொருள் படித்தாலும் அதை உணர்ந்துகொள்ள நம் உணர்வுடன் கலந்த ஒன்றாலேயே முடிகிறது. அதை தாய்மொழி மட்டுமே தர முடியும் என்கிறது அனுபவம்.
இப்போதெல்லாம் என் தந்தை அடிக்கடி உறவினர்களிடம் சொன்னது காதில் ஒலிக்கிறது. "தாய்மொழியில் தற்குறியாக இருந்தால் அடிப்படை புரிதல் இல்லாமல் என் மகள் நுனிப்புல்லாகிவிடுவாள். அவள் மெதுவாய் படித்தால் பரவாயில்லை. ஆங்கிலத்துக்கு மாறும்போது இடர்பாடுகள் இருக்கும். அதுவே கற்பதற்கான வழிமுறை. இடர்பாடுகளை சந்திக்காதவர்கள் வளர்ச்சி பெறுவதில்லை, தாய்மொழியின் புரிதல் வேறெந்த மொழியும் தராது." அவர் கெமிஸ்ட்ரியும் இங்கிலீசும் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மட்டுமல்ல. குழந்தைகளைப் படித்த ஆசான். நமக்கு தான் வயசானதுக்கு அப்புறமா புரியுது.
சில நேரங்களில் சில எண்ணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் புரிபடுவதில்லை. அதுபோலத் தான் இந்த பதிவும். நீண்ட நாட்களாக மனதில் அசைபோட்டுக்கொண்டிருப்பது எழுத துவங்கினாலாவது சற்று தெளிவடைந்து மெருகேற வாய்ப்புண்டு என்பதாலேயே எழுதப்பட்டது. அதற்கான பொறியாய் நேற்றைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அமைந்துவிட்டது. ஒவ்வொருவரும் பெருமையாகவோ ஆறுதலாகவோ தன்னுடனிருக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் மனநிலையைக் காணமுடிகிறது. மதிப்பெண்களே வாழ்க்கை என்கிற பொது நீரோட்டம் சமீப காலங்களில் நன்மைக்காய் திசைதிரும்பி இருக்கிறது. ஆனால் தமிழ் வழிக் கல்வியை, 'நல்லது தான்.. ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு ஒத்துவராது' என்று நிராகரிக்கும் மனநிலையைப் பரவலாகக் காணமுடிகிறது. நியாயமாய் தமிழ் வழியில் தன் குழந்தைகள் பயிலவேண்டும் என்கிற ஆசை உள்ள பெற்றோரும், எங்கே போட்டி நிறைந்த இவ்வுலகில் எதிர்காலத்தில் தன் மக்கள் தனிமைப்பட்டுப் போய்விடுவார்களோ என்கிற பயத்திலே ஆங்கில வழிக் கல்வியை தேர்ந்தெடுப்பதைக் காணமுடிகிறது.
திருக்குறளுக்கெல்லாம் அசைபிரித்து பொருள் விளங்கிக்கொள்வது என்னமோ பெரிய இலக்கணப் புலிகள் செய்யும் சாதனை என்கிற எண்ணமே இன்று இருக்கிறது. ஆனால் செய்யுளை ஒரு அனுபவமாய் மாற்ற அவை தரும் வழிவகை அலாதியனது. இது மட்டுமில்லை, சில நேரங்களில் சாதாரண தமிழ் வார்த்தைகளுக்குக் கூட பொருள் விளக்கும் நிலை வரும்போது, உண்மையிலேயே நமது நிலையும் இருப்பும் குறித்தான பயம் சில்லிடுகிறது. இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் ஒரு மொழியை கற்க முதலாவதாக ஒரு மொழி தேவை. முகம் ஒரு அடையாளமாய் இருப்பது போல மொழி ஒரு உணர்வுப்பூர்வமான அடையாளம். முகத்துக்கு ஒப்பனை செய்யலாம். ஒப்பனை முகமாகிவிடுமா? ஒப்பனையை முகமாக்கும் முயற்சியில் முகமூடிகள் தான் கிடைக்கும். எனினும், எத்துனை அழகான முகமூடியும் முகமாகா. முகமூடிகளின் அழகில் முகத்தைத் தொலைப்பது இருப்பின் சாரத்தைத் தொலைப்பதைப் போன்றது.
தேடிச்சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுளன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ
- பாரதியார்.